ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசத்தல் வெற்றிபெற்ற ஐதராபாத் அணி!

PARIS TAMIL  PARIS TAMIL
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசத்தல் வெற்றிபெற்ற ஐதராபாத் அணி!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றுள்ளது.
 
ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி மற்றும் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 8-வது லீக் போட்டி நடைப்பெற்றது.
 
நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணித் தலைவர் ரஹானேவும், ஜோஸ் பட்லரும் துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
 
இதில் ஜோஸ் பட்லர்(5) வெளியேற அடுத்ததாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரஹானேவுடன் இணைந்து நிதானமாக ஆடினார்.
 
இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. அதில் ரஹானே தனது அரை சதம் கடந்த நிலையில் 70(49) ஓட்டங்களில் வெளியேறினார்.
 
அடுத்ததாக சஞ்சு சாம்சனுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். அதில் சஞ்சு சாம்சன் அதிரடியில் கலக்கினார்.
 
அவர் 55 பந்துகளில் 4 சிக்சர், 10 பவுண்டரியுடன் 102 ஓட்டங்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
 
முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை எடுத்தது.
 
ஐதராபாத் அணியின் சார்பில் ரஷித் கான், நதீம் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஐதராபாத் அணிக்கு 199 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
 
பின்னர் 199 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் சார்பில் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
 
இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் துவக்கம் முதலே ரன் ரேட் வேகமாக உயர்ந்த வண்ணம் இருந்தது.
 
அரை சதம் அடித்து அசத்திய வார்னர் 69(37) ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து அதிரடி காட்டி வந்த பேர்ஸ்டோவ் 45(28) ஓட்டங்களில் கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார்.
 
அடுத்ததாக அணித்தலைவர் கேன் வில்லியம்சன், விஜய் சங்கர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி ஓரளவு நிதானமாக விளையாடிய நிலையில் வில்லியம்சன் 14(10), அதிரயாக விளையாடிய விஜய் சங்கர் 35(15) ஓட்டங்களிலும் வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய மணீஷ் பாண்டே 1 (4) வெளியேறினார்.
 
இறுதியில் யூசுப் பதான் 16(12), ரஷித் கான் 15(8) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
 
ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக வார்னர் 69, பேர்ஸ்டோவ் 45 ஓட்டங்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக கோபால் 3 விக்கெட்டுகளும், ஸ்டோக்ஸ், உனத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
முடிவில் ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது.

மூலக்கதை