ஐபிஎல் டி20 தொடரில் இன்று.... பெங்களூரு - மும்பை அணிகள் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி - மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இந்த தொடரில் வெற்றிக்கணக்கை துவக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரின் துவக்க ஆட்டத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியடைந்துள்ளது. ரோஹித் ஷர்மா தலமையிலான மும்பை இண்டியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

இரு அணிகளுமே வலுவான தலைமையின் கீழ் ஆடி வருகின்றன. இன்றைய போட்டி பெங்களூருவில் நடைபெறுவதால், வெற்றிக் கணக்கை துவக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள கோஹ்லி தலைமையிலான அணிக்கு சாதகம்தான்.கோஹ்லி, பார்த்திவ் படேல், டி வில்லியர்ஸ், மோயீன் அலி, ஹெட்மெய்ர் என வலிமையான பேட்ஸ்மென்கள் அணியில் உள்ளனர். பவுலர்கள் யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, முகமது சிராஜ்  ஆகியோர் மும்பை அணி பேட்ஸ்மென்களை எந்த அளவுக்கு கட்டுப்படுத்துவார்கள் என்பதை பொறுத்தே அணியின் வெற்றி உள்ளது.

பெங்களூரு அணியுடன் ஒப்பிடுகையில் மும்பை அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே சற்று கூடுதல் வலிமையுடன் காட்சியளிக்கிறது என்றே மூத்த வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கேப்டன் ரோஹித் ஷர்மா, குவின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், கிரன் போலார்ட், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, பென் கட்டிங் என பேட்ஸ்மென்களும், ஆல் ரவுண்டர்களும் மிரட்டுகின்றனர்.ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அந்த அணியின் பந்துவீச்சும் மிரட்டலாகவே காட்சியளிக்கிறது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இன்று அணியுடன் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இன்றைய போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம் என்று செய்திகள் வந்துள்ளன.   மும்பையில் நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் அனைத்து வீரர்களும் (பார்த்திவ் படேல் தவிர) ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை