மும்பை அணியில் பும்ரா வெளியே - மாலிங்க உள்ளே

PARIS TAMIL  PARIS TAMIL
மும்பை அணியில் பும்ரா வெளியே  மாலிங்க உள்ளே

இந்தியாவில் நடைபெற்று வரும், ஐ.பி.எல். ரி-20 தொடர் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

 
இந்த நிலையில், இத்தொடரில் இடம்பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாரிய இழப்பொன்று நேர்ந்துள்ளது.
 
ஆம்!. இந்த அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா உபாதைக்குள்ளாகியுள்ளார்.
 
நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, தனது முதல் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.
 
இப்போட்டியின் போது, பும்ரா தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதனால், பும்ராவுக்கு காயத்தின் தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
 
அப்போது காயம் அவருக்கு பெரிதான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. எனினும் அவருக்கும் எதிர்கால நலன்கருதி எதிர்வரும் போட்டிகளில் ஓய்வளிக்கபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடரில், இந்திய அணியில் பும்ரா முக்கிய துருப்பு சீட்டாக இருப்பார் என்ற நிலையில் காயம் அவர் உபாதைக்குள்ளாகியிருப்பது, இந்திய அணியை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்றொரு முன்னணி வீரரான லசித் மாலிங்கவிற்கு, ஐ.பி.எல். தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.
 
இம்முறை ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு முன் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான லசித் மாலிங்க, உலகக் கிண்ணப் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில்,
 
மும்பை அணியில் முதல் ஆறு போட்டிகளில் விளையாட முடியாது என அறிவித்திருந்தார்.
இந்த காலப்பகுதியில், இலங்கையில் நடைபெறும் மாகாண ஒருநாள் தொடரில் விளையாட மாலிங்க தீர்மானித்திருந்தார்.
 
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் நிர்வாகம், மாலிங்கவை விடுவிக்க கோரி இலங்கை கிரிக்கெட் சபையிடம் கேட்டுக்கொண்டது.
 
இதற்கமைய, ஐ.பி.எல் தொடரில் திறமையை வெளிப்படுத்தினால் மாத்திரமே உலகக் கிண்ண அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்ற நிபந்தனையுடன் லசித் மாலிங்கவுக்கு மாகாண ஒருநாள் தொடரிலிருந்து விடுகை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
 
ஆகேவே, உடனடியாக அவர் மும்பை அணியில் இணைய உள்ளார். அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மலிங்கா இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
லசித் மாலிங்க இதுவரை 110 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்தோடு, ஐந்து விக்கெட்டுகளை ஒருமுறை வீழ்த்தியுள்ளார். 13 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை சாய்த்ததே அவரது சிறப்பான பந்துவீச்சு பிரதியாகும்.
 
அத்தோடு, ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் மாலிங்கவையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக செயற்பட்ட மாலிங்க இம்முறையில் அணியின் ஒரு வீரராக களமிறங்கவுள்ளதால், அவரின் மீள் வருகையை இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மூலக்கதை