50% ‘விவிபேட்’ ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க கோரிய விவகாரம்: 23 எதிர்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்பதில் சிக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
50% ‘விவிபேட்’ ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க கோரிய விவகாரம்: 23 எதிர்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்பதில் சிக்கல்

* 3 பேர் நிபுணர் குழுவின் பரிந்துரையில் பரபரப்பு

புதுடெல்லி: 50 சதவீத ‘விவிபேட்’ ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க கோரி, 23 எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுபடி 3 பேர் கொண்ட நிபுணர் குழு தேர்தல் கமிஷனிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், எதிர்கட்சிகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்பது சிரமம் என்றும், அதற்கு மாறாக சில பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன.

‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால், மீண்டும் வாக்கு சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்’ என எதிர்கட்சிகள் கூறிவருகின்றன. ஆனால், இதை நிராகரித்த தேர்தல் ஆணையம், ‘எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது.

மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்ப வாய்ப்பில்லை’ என்று கூறிவருகிறது. இதை ஏற்க மறுக்கும் எதிர்கட்சி தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசித்து, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா ஆகியோரை கடந்த சில வாரங்களுக்கு முன் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அதிகளவில் பழுதாகின.

மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில், பதிவான ஓட்டுக்களுக்கும், எண்ணப்பட்ட ஓட்டுக்களும் பொருந்தவில்லை என தகவல்கள் வெளியாயின. இதுபோன்ற சம்பவங்கள், எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை எழுப்புகின்றன.

மக்களவை தேர்தலில், முடிவுகளை அறிவிக்கும் முன் 50 சதவீத எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரங்களின் முடிவுகள், வாக்காளர் ஒப்புகை சீட்டுகளுடன் (விவிபேட்) பொருந்துகிறதா? என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இந்த தணிக்கை முறை வெனிசுலாவில் பின்பற்றப்படுகிறது.

இந்த சீர்திருத்தத்தை கூடுதல் செலவு இல்லாமல் அமல்படுத்த முடியும்.

ஓட்டு இயந்திரத்தில் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, ஓட்டுக்களின் வேறுபாடு வெற்றி வேட்பாளருக்கு முழு சாதகமாகவும், 2ம் இடத்தில் உள்ள வேட்பாளரின் வாக்குகள் 5 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், அந்த தொகுதி முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்காளர் ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும்.

இதில் வித்தியாசம் இருந்தால், விவிபேட் ஓட்டு எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ‘ஒரு தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்துக் கொள்ளலாம்’ என தெரிவித்தது. இதற்கிடையே, ‘ஒப்புகைச் சீட்டுகளை 50 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சரிபார்க்க வேண்டும்’ என, 23 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

திமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் கே. சி. வேணுகோபால், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் உள்ளிட்ட தலைவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனு மீதான விசாரணை கடந்த 15ம் தேதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தலைமை தேர்தல் ஆணையம், மேற்கண்ட மனு ெதாடர்பான விளக்கத்தை வருகிற 25ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ எனக்கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இவ்வழக்கு நாளையோ அல்லது ஒருசில நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை தலைமை தேர்தல் ஆணையம் நியமித்தது.

அந்த குழு கடந்த வெள்ளிக் கிழமை, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதுகுறித்து, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:
உ்ச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவில் டெல்லியில் உள்ள ஐ. எஸ். ஐ. மையத்தின் தலைவரான அபிகே ஜி பட்,

சென்னை கணிதவியல் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேவா எல் கரண்டிகர், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகத்தின் துணை இயக்குனர் ஜெனரல் (சமூக புள்ளிவிவரம் பிரிவு) புரோஷாத் கோஷ் ஆகியோர் கொண்ட நிபுணர் குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில், எதிர்க்கட்சிகள் ேகாரியபடி, 50 சதவீத வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களை ரேண்டமாக பரிசோதிக்க கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், அவ்வாறு செய்ய இயலாது.

அதற்கு பதிலாக, சட்டசபையோ, மக்களவை தொகுதியோ ஏதேனும் ஒருசில சந்தேகத்துக்கு உரிய அல்லது கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற நிலையில் உள்ள வாக்குச்சாவடியின் வாக்குப்பதிவு இயந்திரங்களை தணிக்கை செய்ய ஆலோசனை மற்றும் பரிந்துரை வழங்கி உள்ளது. இதன் விபரம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

அதன்பின் வரும் உத்தரவுகளை பொறுத்தே, ஒப்புகை சீட்டுகளை தணிக்கை செய்ய முடியும்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

.

மூலக்கதை