பிஎம் நரேந்திரமோடி திரைப்படத்திற்கு சிக்கல்: உயர்த்தி பேசப்படும் ஆயுதமும், வன்முறையும்... தேர்தல் ஆணையத்திடம் காங். நிர்வாகிகள் புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிஎம் நரேந்திரமோடி திரைப்படத்திற்கு சிக்கல்: உயர்த்தி பேசப்படும் ஆயுதமும், வன்முறையும்... தேர்தல் ஆணையத்திடம் காங். நிர்வாகிகள் புகார்

பிரதமர் மோடியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘பிஎம் நரேந்திரமோடி’ எனப் பெயரிலான திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. ஓமங்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விவேக் ஓபராய், பிரதமர் மோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில், ‘பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை திரையிடுவதற்கு முன், தேர்தல் ஆணையம் பார்வையிட வேண்டும்’ என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 5ம் தேதி நாடு முழுவதும் திரைக்கு வரவுள்ள நிலையில், டிரெய்லர் காட்சிகள் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டு வருகின்றன.

தற்போது தேர்தல் நேரம் என்பதால், இவ்விவகாரத்தைக் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. இது தொடர்பான மனுவை கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் வழியாக தேர்தல் ஆணையத்திடம் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி செயலர் ஏ. என். நடராஜ் கவுடா, துணைத் தலைவர் எஸ். ஏ. அகமது, சட்டப் பிரிவுச் செயலர் சூர்யாமுகுந்த்ராஜ் ஆகியோர் கூட்டாக அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பல கட்டங்களாக நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், ஏப்ரல் 5ம் தேதி பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

பிரதமர் மோடி சார்ந்திருக்கும் பாஜ, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற தேர்தலைச் சந்திக்கவுள்ளது. இப்படம் வெளியிடப்படும் காலம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் காட்சிகள் ஆயுதங்களையும், வன்முறையையும் உயர்த்திப் பேசுவதாக அமைந்துள்ளன. எனவே, இத் திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பு அதை தேர்தல் ஆணையம் பார்வையிட வேண்டும்.

மேலும், படத்தை முன்கூட்டியே பார்வையிடவும், அதுதொடர்பாக ஆட்சேபங்களை தெரிவிக்கவும் அரசியல் கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிடுவதற்கு முன்பாக அந்த படத்தைத் தேர்தல் ஆணையம் பார்வையிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளனவா? நடுநிலையாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்துமா? என்பதை ஆராய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிஎம் நரேந்திர மோடி’ வெளியிடப்படும் காலம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது

.

மூலக்கதை