தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு நாளை மறுநாள் கடைசி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு நாளை மறுநாள் கடைசி

* முக்கிய பிரமுகர்கள் நாளை மனு தாக்கல்
* 27ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாளுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது. இதனால், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

இதை தொடர்ந்து 27ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் தமிழகத்தில் மக்களவை தொகுதிக்கு 179 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் 29 பேர் பெண்கள். அதேபோன்று 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 68 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றும் இன்றும் விடுமுறையாகும்.

இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இந்த நிலையில் நாளை மறுநாளுடன்(26ம் தேதி) வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

நாளை மறு நாள் செவ்வாய் கிழமை என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்வது குறைவாகவே இருக்கும்.
எனவே, நாளை அதிகம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், நாளை முக்கிய பிரமுகர்கள் பலர் மனு தாக்கல் செய்கின்றனர். குறிப்பாக, தூத்துக்குடியில் கனிமொழி உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

அதே போன்று, திருச்சியில் திருநாவுக்கரசர், கன்னியாகுமரியில் எச். வசந்தகுமார், தேனியில் ஈவிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களும், ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் உட்பட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.



மேலும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பலர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். குறிப்பாக, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை,  சிவகங்கையில் எச். ராஜா உள்ளிட்ட பாஜ வேட்பாளர்களும் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.   மேலும், சட்டசபை தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பலரும் நாளை மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமமுகவிற்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. எனவே, நாளை மறுநாள் அமமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.



இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதனால் திமுக, அதிமுக உட்பட சுயேச்சை வேட்பாளர்கள் என அதிகம் பேர் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.


இதை தொடர்ந்து 27ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. அப்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் சரிதானா என்பது குறித்து  பரிசீலனை செய்யப்படும்.

இதை தொடர்ந்து, 29ம் தேதி மாலை 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் வாங்கலாம். அன்றைய தினம் மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.


.

மூலக்கதை