கிரஷர் துகள்களால் கருகும் பயிர்கள் விவசாயிகள் வேதனை

தினகரன்  தினகரன்
கிரஷர் துகள்களால் கருகும் பயிர்கள் விவசாயிகள் வேதனை

பொங்கலூர்: பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் கிரஷர் துகள்களால் பயிர்கள் கருகுகின்றன. விவசாயிகள் வேதனை  அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மங்கலம், பூமலூர், காரணம்பேட்டை, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில்  தனியாருக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில்,  வீரியமிக்க சக்திவாய்ந்த வெடிமருந்துகளை பயன்படுத்தி பாறைகளை தகர்ப்பதும், உடைக்கப்பட்ட பாறைகளை கிரஷர் இயந்திரம் மூலம் சிறுசிறு  கற்களாக மாற்றுவதும், சிறு கற்களிலிருந்து பாறைத்துகள்களை தயாரித்து விற்பனைக்கு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதும்  தொடர்கிறது. பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, கரும்பு, வாழை, மஞ்சள், பாக்கு உள்ளிட்ட விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள  கல் குவாரிகள் மற்றும் கிரஷர் ஆலைகளிலிருந்து வெளியேறும் பாறைத்துகள்கள் காற்றில் பரவி விவசாய விளைநிலங்களிலும், கரும்பு, தென்னை,  வாழை உள்ளிட்ட பயிர்கள் மீதும் பரவி படர்ந்துள்ளன. இதனால், கரும்பு, தென்னை, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் கருகி, காய்ந்துவிடும் நிலை  தொடர்கிறது.  மேலும், 200 அடி ஆழத்தில் இருந்து பாறைகளை வெட்டி எடுப்பதன் காரணமாக ஐம்பது முதல் எழுபது அடி ஆழமே உள்ள சுற்றுவட்டார பகுதி  விவசாய கிணறுகளில் தண்ணீர் வற்றிவிடுகிறது. இதன்மூலம், இப்பகுதியில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. விவசாய கிணற்றில் தண்ணீர்  இல்லை. ஆனால், வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைக்குழிக்குள்  தண்ணீர், யாருக்கும் பயனின்றி கிடக்கிறது. பயிர் கருகுதல், ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வற்றிப்போகுதல் ஆகியவற்றால் இப்பகுதியில் விவசாயம் நாளுக்கு நாள் வலிவடைந்து வருகிறது.  இதன்காரணமாக, விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பொதுவாக, எந்த பகுதியில் கிரஷர் அமைக்கவேண்டும் என்றாலும், சாலை ஒரத்தில் இருந்து 200 முதல் 500 மீட்டர் இடைவெளி விட்டு, மாசு  வெளியில் பரவாமல் இருக்கும் வகையில், கிரஷர்களை சுற்றி மதில்சுவர் அமைப்பது, வெளியேறும் துகள்களை டேங்க் மூலம் சேமித்து அகற்றுதல்  ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ேவண்டும். குடிநீர் கிணறு, விவசாய கிணறு, வேளாண் பயிர்கள் போன்றவற்றுக்கு பாதிப்பு இல்லாமல் கிரஷர்  அமைக்கப்பட வேண்டும் என்பதி விதிமுறை. ஆனால், எந்த கிரஷர் உரிமையாளர்களும் இதை பின்பற்றுவதில்லை. விதிமீறல் குறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களும் கண்டுகொள்வதில்லை. இது,  விவசாயிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பல்லடம், பொங்கலூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘’கனிமவளம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள்  இப்பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும். குறிப்பிட்ட ஆழத்திற்கும் மேல் பாறைகள் வெட்டி எடுக்க தடை விதிக்க வேண்டும். அதிகளவு  வெடிமருந்துகளை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். கிரஷர் ஆலை பாறைத்துகள்களால் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு, வாழை, தென்னை,  உள்ளிட்ட பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’’’’ என்றனர்.கனிமவள அதிகாரிகள் கூறுகையில், ‘’கிரஷ்ர் மற்றும் கல் குவாரிகளில் இருந்து வெளியேறும் மாசு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பட்சத்தில்  இதுபற்றி மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட இடத்தை  நேரில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’’’ என்றனர்.

மூலக்கதை