திருவனந்தபுரத்தில் விமான நிலையம், இஸ்ரோவை வட்டமிட்ட ஆளில்லா விமானம் : தீவிரவாதிகள் சதிச்செயலா என விசாரணை

தினகரன்  தினகரன்
திருவனந்தபுரத்தில் விமான நிலையம், இஸ்ரோவை வட்டமிட்ட ஆளில்லா விமானம் : தீவிரவாதிகள் சதிச்செயலா என விசாரணை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நள்ளிரவு நேரத்தில், ஏர்போர்ட் மற்றும் இஸ்ரோ அமைந்துள்ள பாதுகாப்பு மிகுந்த பகுதியில் ஆளில்லா விமானம் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தீவிரவாதிகளின் சதி செயலா என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா முழுவதும் விமான நிலையங்கள் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதையடுத்து ராணுவ மையங்கள், விமான படை மையம் உள்பட முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் வரலாம் என்ற ரகசிய தகவல் உள்துறைக்கு கிடைத்ததை அடுத்து, இந்திய எல்லையில் உள்ள கடல் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு 1 மணியளவில் திருவனந்தபுரம் கோவளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்ேபாது பயங்கர சத்தத்துடன் திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே ஒரு ஆளில்லா விமானம் வட்டமிட்டது. அதிர்ச்சியடைந்த போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.சிறிதுநேரத்தில் அந்த விமானம் மாயமானது. இருப்பினும் போலீசார் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இந்தநிலையில் சில மணி நேரம் கழித்து அதிகாலை 3.30 மணியளவில் தும்பாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அருகே ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. இதை அங்கு பாதுகாப்பில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்கள் கவனித்தனர். அவர்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அந்த விமானமும் மாயமானது. இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் சம்பவம் இடம் விரைந்து சென்று தீவிர விசராணை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் விமான நிலையத்தில் இருந்த ரேடார் கருவிகளை பரிசோதித்தனர். அதில் ஆளில்லா விமானம் பறப்பது குறித்த காட்சி பதிவாகவில்லை. ஆளில்லா விமானத்தை பறக்க விட்டது யார்? தீவிரவாதிகளின் சதி செயலா? அல்லது வெளிநாட்டினர் யாராவது ஊடுருவி உள்ளனரா? உள்ளிட்ட பல கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்கதை