சுனில் லம்பா ஓய்வு பெறுவதை தொடர்ந்து கடற்படை புதிய தளபதியாக கரம்பீர் சிங் நியமனம்

தினகரன்  தினகரன்
சுனில் லம்பா ஓய்வு பெறுவதை தொடர்ந்து கடற்படை புதிய தளபதியாக கரம்பீர் சிங் நியமனம்

புதுடெல்லி:  இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடற்படை தளபதியாக இருக்கும் சுனில் லம்பாவின் 3 ஆண்டு பதவிக் காலம் வரும் மே 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய தளபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை நடந்தது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முதல் கடற்படை தளம் என பெயர் பெற்ற விசாகப்பட்டினதை தலைமையகமாக கொண்ட கிழக்கு கடற்படை மண்டலத்தின் தலைவராக இருக்கும் கரம்பீர் சிங், கடற்படை துணை தளபதி ஜி.அசோக் குமார், மேற்கு கடற்படை தலைவர் அஜித் குமார், தெற்கு கடற்படை தலைவர்  அனில் குமார் சாவ்லா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் இறுதியாக கரம்பீர் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவர் வரும் மே 31ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இதற்கு முன்னர், கடந்த 2017ம் ஆண்டு கடற்படை பணியாளர் இணை மற்றும் துணைத் தலைவராக கரம்பீர் சிங் பதவி வகித்தார். 37 ஆண்டு கால கடற்படை சேவையில், கடற்படைக்கு சொந்தமான சாந்த் பீபி, விஜய்துர்க், டெல்லி, ராணா ஆகிய 4 கப்பல்களின் தலைவராக பணியாற்றிய கரம்பீர் சிங், அதிவிஷிஸ்ட சேவா, பரம்விஷிஸ்ட சேவா உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த கரம்பீர் சிங், மகாராஷ்டிராவில் தனது பள்ளி படிப்பை முடித்த உடன் ராணுவத்தில் இணைந்தார்.

மூலக்கதை