மலிவான விலையில் அசத்த வரும் இந்திய எலெக்ட்ரிக் கார்

தினகரன்  தினகரன்
மலிவான விலையில் அசத்த வரும் இந்திய எலெக்ட்ரிக் கார்

இந்திய வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கார் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV300). இது,  எஸ்யூவி (SUV) வகையை சேர்ந்த கார். ஏராளமான சிறப்பம்சங்கள் நிரம்பிய இந்த கார் கடந்த 14ம் தேதி விற்பனைக்கு வந்தது. இதன் ஆரம்ப  விலை ₹7.90 லட்சம் (எக்ஸ் ஷோரூம்). இந்த கார், எஸ்210 (S210) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. ஸ்டாண்டர்டு ரேஞ்ச் (Standard Range) மற்றும் லாங்  ரேஞ்ச் (Long Range) என்ற 2 வெர்ஷன்களில், இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், எலெக்ட்ரிக் வாகனம்  எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதே ‘’ரேஞ்ச்’’ என குறிப்பிடப்படுகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவில் விற்பனையாகும் எலெக்ட்ரிக்  வாகனங்களின் ரேஞ்ச் மிகவும் குறைவாக உள்ளது. இதன், லாங் ரேஞ்ச் வெர்ஷனில் ஒரு முறை சார்ஜ் செய்தால், 350-400 கி.மீ வரை மிக எளிதாக  பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில்தான் இவ்வளவு அதிகமான  ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவிலும் இத்தகைய தரம் வாய்ந்த கார்கள் உற்பத்தி  செய்யப்பட இருப்பது பெருமை கொள்ளவேண்டிய விஷயம்தான். இந்த காரின், ஸ்டாண்டர்டு வெர்ஷனில் ஒரு முறை சார்ஜ் செய்தால், 200 கி.மீ வரை பயணம் செய்ய முடியும். இந்த காரின் பேட்டரிக்காக மஹிந்திரா  மற்றும் எல்ஜி செம் (LG Chem) ஆகிய நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. இவ்விரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்படவுள்ள  மிகவும் அதிசக்தி வாய்ந்த, எதிர்காலத்திற்கும் உகந்த லித்தியன் இயான் பேட்டரிகள் இந்த காரில் பொருத்தப்பட உள்ளது. இந்திய கால நிலைகள்  மற்றும் சாலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த பேட்டரி இருக்கும். நிக்கல் - மாங்கனீசு - கோபால்ட் அடிப்படையிலான லித்தியம் இயான்  பேட்டரிகளையும் இந்த கூட்டணி உருவாக்கவுள்ளது. இந்த பேட்டரிகள், ஆற்றல் அடர்த்தி (Energy Density) என்ற விஷயத்தில் சிறப்பாக  செயல்படக்கூடியவை. இந்த பேட்டரியானது, அளவில் கச்சிதமாக இருக்கும். அதே நேரத்தில் அதிக அளவிலான சக்தியை சேமித்து வைக்கமுடியும். இதன்மூலம், எலெக்ட்ரிக்  வாகனங்களின் ரேஞ்ச் அதிகரிக்கும். இவ்வாறான பேட்டரிகள்தான் தற்போதைய தேவை. இந்த காரின் வழக்கமான வெர்ஷனை காட்டிலும், எலெக்ட்ரிக்  வெர்ஷனின் விலை சற்று அதிகமாக இருக்கும். ஏனெனில், இதன் பேட்டரிகள் மிகவும் விலை உயர்ந்தவை. ஆனால், இவைதான் ஆட்டோமொபைல்  துறையின் எதிர்காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் விலை 20 லட்சம் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.  தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா (Hyundai Kona) என்ற எலெக்ட்ரிக் காரும் இந்திய  மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுவும் எஸ்யூவி ரக கார்தான். இதன் ஆரம்ப விலை 25 லட்சமாக இருக்கலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் ஒப்பிடுகையில், மஹிந்திரா பேட்டரி கார் விலை குறைவு என்கிறது மஹிந்திரா நிறுவனம். மஹிந்திரா எக்ஸ்யூவி300  எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை