தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் தேர்தல் பணியில் 3.45 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் தேர்தல் பணியில் 3.45 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்கள்

* முதல் கட்ட பயிற்சி நாளை நடைபெறுகிறது
* 7316 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு அன்று 3. 45 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி முகாம் நாளை நடைபெறுகிறது.

7,316 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்து சென்ற ரூ. 20 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் 8 கிலோ தங்கம், 83 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக, பறக்கும் படை சோதனையில் பெரிய அளவில் தங்கம் சிக்குவது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

இதில் தனியார் சுவர்களில் மட்டும் 1. 5 லட்சம் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 875 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



வருமான வரித்துறையுடன் தேர்தல் ஆணையம் இணைந்து பணியாற்றுகிறது. அதன்படி, அனைத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஓட்டல்கள், பண்ணை வீடுகள் மற்றும் பண நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.

வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தவிர சாதாரண பொதுமக்களும் சரியான ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் ரூ. 10 லட்சத்துக்குள் பணம் எடுத்து சென்றால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள். ரூ. 10 லட்சத்துக்கும் மேல் ஆவணங்களுடன் பணம் வைத்திருந்தாலும் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும்.

அவர்களிடம் சரியான ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம். அரசியல் கட்சியினர் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் எவ்வளவு பணம் கொண்டு சென்றாலும் பறிமுதல் செய்யப்படும்.

அதேபோன்று ரூ. 10 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசு பொருட்கள், மதுபான பாட்டில்கள் வாகனங்களில் இருந்தாலும் பறிமுதல் செய்யப்படும். பிடிபட்ட பணத்தை சரியான ஆவணங்களை காட்டி பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம்.

தேர்தலையொட்டி, வருமான வரித்துறையினர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி அதிக பண நடமாட்டம் பற்றி பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் 18004256669, பேக்ஸ் 044-28262357, வாட்ஸ் அப் 9445467707 என்ற எண்ணுக்கும், itcontrol. chn@gov. in என்ற இ-மெயில் முகவரிக்கும் புகார் அனுப்பலாம். புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

யார் புகார் அளித்தார்கள் என்ற தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும் தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 200 கம்பெனி துணை ராணுவத்தினர் வர உள்ளனர்.

இதில் 10 கம்பெனி துணை ராணுவத்தினர் கடந்த 18ம் தேதி சென்னை வந்தனர். ஒரு கம்பெனியில் 80 முதல் 90 துணை ராணுவ வீரர்கள் இருப்பார்கள்.

இவர்கள் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவுடன் இணைந்து வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். மீதமுள்ள 190 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஏப்ரல் மாதம் 15ம் தேதி தமிழகம் வருவார்கள்.

இவர்கள் தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் மொத்தமுள்ள 67,664 வாக்குச்சாவடிகளில் 7,316 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் அறிக்கை அளித்துள்ளனர்.

பதட்டமான வாக்குச்சாவடிகள் முழுவதும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பில் வாக்குப்பதிவு நடைபெறும். மேலும், இந்த வாக்குச்சாவடிகள் முழுவதும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பணியில் 3. 45 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்காக முதல்கட்ட பயிற்சி முகாம் நாளை நடைபெறுகிறது.

மேலும் தொடர்ந்து வரும் நாட்களில் 2ம் கட்ட, 3ம் கட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மதுரை தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு 48 மணி நேரம் முன் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

.

மூலக்கதை