அதிமுக அரசை காப்பாற்ற மறைமுக முயற்சியா? 18 தொகுதி இடைத்தேர்தலில் ஆர்வம் காட்டாத தினகரன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுக அரசை காப்பாற்ற மறைமுக முயற்சியா? 18 தொகுதி இடைத்தேர்தலில் ஆர்வம் காட்டாத தினகரன்

* அதிர்ச்சியில் தொண்டர்கள்: திரைமறைவில் நடப்பது என்ன? பரபரப்பு தகவல்கள்
திருச்சி: தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 18 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தது 9 தொகுதிகளில் வென்றால் தான் ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற நிலை அதிமுகவுக்கு உள்ளது.

இதனால் சட்டமன்ற தொகுதிகளில் அதிகளவு வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்த காரணத்தால், அமமுக துணைபொது செயலாளர் டிடிவி. தினகரனின் ஆதரவாளர்கள் 18 பேரின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டதால் தான் இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும் என்ற திட்டத்தில் தான் தினகரனும், செயல்பட்டு வந்தார். ஆனால் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியலை பார்க்கும் போது, ஆட்சியை அதிமுக தக்க வைக்க தினகரன் மறைமுக ஆதரவு தருவதாக அரசியல் விமர்சர்கள் தெரிவித்துள்ளனர்.

காரணம், தகுதி நீக்க எம்எல்ஏக்களான ஆண்டிப்பட்டி தங்க. தமிழ்செல்வன், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், சோளிங்கர் பார்த்திபன் ஆகிய 3 பேருக்கும் மீண்டும் அவர்களது தொகுதிகளிலேயே வாய்ப்பு வழங்கப்படாமல், எம்பி தேர்தலில் சீட் வழங்கப்பட்டுள்ளது.



இதில் தங்க. தமிழ்செல்வனும், பழனியப்பனும் ஆண்டிப்பட்டியிலும், பாப்பிரெட்டிப்பட்டியிலும் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டது. இதனால் அவர்களையே நிறுத்தி வெற்றி பெற வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க நினைக்காமல், ஏன் இவர்களை தினகரன் எம்பி தேர்தலில் நிறுத்தி உள்ளார் என்று கேள்வி அனைவரது மனதிலும் பரவலாக எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசியல் விமர்சர்கள் கூறியதாவது: புதுச்சேரி மக்களவை தொகுதி, ஒசூர் சட்டமன்ற தொகுதி தவிர மற்ற தொகுதிகளுக்கு தினகரன் வேட்பாளர்களை அறிவித்து விட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் விளாத்திகுளம் உமாமகேஸ்வரிக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கையில் பணம் இல்லாததால், தேர்தலில் நிற்கவில்லை என்று தினகரனிடம் அவர் சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் தங்க தமிழ்செல்வன், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் ஆகியோர் தங்களது தொகுதிகளில் கனிசமான வாக்குகளை குறிப்பாக 2வது இடத்துக்காவது வருவார்கள் என்று கணிக்கப்பட்டது.

ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று உண்மையிலேயே தினகரன் நினைத்திருந்தால், இவர்களுக்கு மீண்டும் ஆண்டிப்பட்டியிலும், பாப்பிரெட்டிப்பட்டியிலும் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.

தினகரன் அவ்வாறு செய்யாதது தான் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக அதிமுகவையும், அமமுகவையும் இணைக்க பாஜ மேலிடம் முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தினகரன் வைத்த சில நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால், இணைப்பு கைகூடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைவார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று மதுரை ஆதீனம் நேற்றுமுன்தினம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதை உடனடியாக தினகரன் மறுத்தாலும், அவரது வேட்பாளர் பட்டியலை பார்க்கும் போது ஆதீனத்தின் பேச்சு உண்மையாக இருக்குமோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு மீண்டும் அதிமுக- அமமுக இணைப்பு பேச்சுவார்த்தை நடக்கலாம்.

இதற்கு சாதகமாகவே தினகரன் 18 தொகுதி இடைத்தேர்தலில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். தினகரனின் ரகசிய திட்டம் என்ன என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தெரிந்து விடும்.



தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை வீழ்த்தவே, தங்க தமிழ் செல்வனை களமிறக்கி இருப்பதாக அமமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதேபோல, பாமக கடைசி வரை தங்களிடம் வருவதாக கூறிவிட்டு, கடைசியில், தங்களால் தேர்தல் செலவுக்கு பணம் தர முடியாது என்று கூறியதால், அதிமுக பக்கம் சாய்ந்த பாமகவுக்கு பதிலடி கொடுக்க தர்மபுரியில் பழனியப்பை களம் இறக்கியதாக கூறப்படுகிறது.

தினகரனின் ரகசிய திட்டத்தால், தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

.

மூலக்கதை