'தினமலர்' வழிகாட்டி இனிதே நிறைவு, ஆலோசனை பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
தினமலர் வழிகாட்டி இனிதே நிறைவு, ஆலோசனை பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர் கல்வி படிப்பதற்கான வழிமுறைகளை காட்டும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, மார்ச், 21 முதல், நேற்று வரை, சென்னையில் நடந்தது.
'தினமலர்' நாளிதழுடன், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து, சென்னை கலைவாணர் அரங்கில், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நடந்த கருத்தரங்குகளில், கல்வியாளர்கள், துறை சார் நிபுணர்கள், உளவியலாளர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு ஆலோசனைகளை தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர் வந்து, உயர் கல்வி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.பல்வேறு பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் கல்வி ஆலோசனை மையங்கள் சார்பில், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
அவற்றில், அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், தங்கள் கல்லுாரிகளின் பாட பிரிவு, மாணவர் சேர்க்கை விபரம், கல்விக் கட்டணம் உள்ளிட்டவை குறித்து, மாணவர்களுக்கு விளக்கினர்.இதில், 'அப்ளிகேஷன் முதல் அட்மிஷன்' வரையிலும், அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டன.மாணவர்களை உற்சாகப்படுத்த, உளவியல் ஆலோசகர் கதிரவன், உளவியல் சுய மதிப்பீட்டு தேர்வை நடத்தினார்.
மாணவர்களிடம், பொது அறிவு கேள்விகள் கேட்கப்பட்டு, அதில் சரியான பதில் அளித்தவர்களுக்கு, 'டேப்லெட், வாட்ச்' போன்றவை, பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்களும், பெற்றோரும், கலை, அறிவியல் படிப்பு முதல், கட்டடவியல், மருத்துவம் வரையில் அனைத்து பாடப் பிரிவுகள் குறித்தும், தகவல்களை திரட்டிச் சென்றனர்.மாணவர்களின் வசதிக்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து, கல்வி நிறுவனங்கள் சார்பில், இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் வகையில், பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் குறித்த தகவல்கள் அடங்கிய, 'தினமலர்' வழிகாட்டி புத்தகங்கள், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த ஆண்டுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, நேற்று மாலையுடன் இனிதே முடிந்தது.உறுதுணையான நிறுவனங்கள்'தினமலர்' நாளிதழுடன், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து, வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தியது. 'பவர்டு -பை ஸ்பான்சர்'களாக, கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் மற்றும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்துள்ளன.'வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, இந்துஸ்தான் குழும கல்வி நிறுவனங்கள், ஆவடி செயின்ட் பீட்டர்ஸ் குழும கல்வி நிறுவனங்கள், எஸ்.ஏ. இன்ஜினியரிங் கல்லுாரி, ஸ்ரீ சாஸ்தா கல்வி நிறுவனங்கள், செயின்ட் ஜான்ஸ் எஜுகேர் ஆகிய நிறுவனங்கள், நிகழ்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டுள்ளன.
நெஞ்சார்ந்த நன்றிஇந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற, முழு ஒத்துழைப்பு அளித்த பல்கலைகள், கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், கல்வி ஆலோசகர்கள், துறை சார் நிபுணர்கள், அரசு துறை அலுவலர்கள், பணியாளர்கள், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும், 'தினமலர்' நாளிதழ் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில், நன்றி தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை