சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

தினகரன்  தினகரன்
சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

ஈபோ: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. மலேசியாவின் ஈபோ நகரில் 28வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, தென் கொரியா, கனடா, ஜப்பான், மலேசியா, போலந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியுடன் மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோதுகின்றன. புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மார்ச் 30ம் தேதி பைனலில் மோத உள்ளன. தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் வருண் குமார் அபாரமாக கோல் அடிக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்து 56வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங் கோல் போட்டு அசத்தினார். பதில் கோல் அடிக்க ஜப்பான் வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. மற்றொரு லீக் ஆட்டத்தில் தென் கொரியா 6-3 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது. இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று தென் கொரியாவை சந்திக்கிறது.

மூலக்கதை