டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்ய தொடர்பு 2 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை அறிக்கை தாக்கல்

தினகரன்  தினகரன்
டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்ய தொடர்பு 2 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை அறிக்கை தாக்கல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யர்கள் உதவினர் என்ற குற்றச்சாட்டு குறித்த விசாரணை அறிக்கையை சிறப்புக் குழுத் தலைவர் ராபர்ட் முல்லர், அமெரிக்க அட்டர்னி ஜெனரலிடம் நேற்று தாக்கல் செய்தார். இதில் புதிய குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை. அமெரிக்காவில் கடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் ரஷ்யர்களின் குறுக்கீடு இருந்ததால், ஹிலாரி தோல்வியடைந்ததாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சுமத்தினர். இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க முன்னாள் எப்பிஐ இயக்குனர் ராபர்ட் முல்லர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கடந்த 22 மாதங்களாக இந்த விசாரணையை நடத்தினர். இந்த விசாரணையின்போது 3 நிறுவனங்கள் மற்றும் 34 தனி நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் 7 பேர், ரஷ்யர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றத்தை ஒப்புக் கொண்டனர். ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. முல்லர் குழு அதிபர் டிரம்பிடம் எழுத்து பூர்வமாக சில கேள்விகள் கேட்டிருந்தது. அதற்கு டிரம்ப் சார்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது. எனது தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என டிரம்ப் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில் தனது விசாரணை அறிக்கையை ராபர்ட் முல்லர், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் வில்லியம் பாரிடம் சமர்ப்பித்தார். இதுகுறித்து அமெரிக்க நீதித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘முல்லர் அறிக்கை, ஏற்கனவே கூறிய குற்றச்சாட்டு தவிர, வேறு எந்த குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை’’ என்றார். சபாநாயகர் நான்சி பெலோசி, செனட் சிறுபான்மை தலைவர் சக் சூமர் ஆகியோர் விடுத்துள்ள கூறுகையில், ‘‘விசாரணை அறிக்கையின் முழு விவரத்தையும், கண்டுபிடிப்பையும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அட்டர்னி ஜெனரல் தெரிவிப்பார். இது குறித்து எந்த தகவலையும் அதிபர் டிரம்புக்கு அட்டர்னி ஜெனரல் முன்கூட்டியே தெரிவிக்கக் கூடாது. இதன் முடிவில் வெள்ளை மாளிகை தலையிடக் கூடாது’’ என தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை