ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்புவதில் அலட்சியம்

தினமலர்  தினமலர்
ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்புவதில் அலட்சியம்

ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்புவதில், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள், அலட்சியமாக செயல்படுகின்றன; ஒப்பந்த விதியை கடுமையாக்க வேண்டும் என, வங்கி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தேசிய மற்றும் தனியார் வங்கி, ஏ.டி.எம்., இயந்திரங்களில், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, பணம் நிரப்பும் முறை பல ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகளுடன் இணைந்திருக்கும், ஏ.டி.எம்.,களில், வங்கி கிளை அதிகாரிகள்பணத்தை நிரப்புவர். தொலைவில் உள்ள, ஏ.டி.எம்.,களில், தனியார் நிறுவனங்கள், வங்கிகளில் பணம் பெற்று அவற்றை நிரப்பும்.இந்த நிறுவனங்கள் பல்வேறு தவறுகளில் ஈடுபடுகின்றன; முறையாக பணத்தை நிரப்புவதில்லை என்ற குற்றச்சாட்டு, வங்கி அதிகாரிகளிடையே பரவலாக எழுந்துள்ளது.


இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கிகளில், வாடிக்கையாளர்களின் கூட்டத்தை குறைக்கவே, ஏ.டி.எம்., நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்பின், ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்ப, தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டன. ஆனால், இந்த நிறுவனங்கள் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன.வங்கிகளில் இருந்து பெறும் பணத்தை முழுமையாக நிரப்புவதில்லை. புதிய நோட்டுகள் வாங்கிச் சென்று, பழைய நோட்டுகள், கிழிந்த நோட்டுகளை நிரப்புவது; பணத்தை திருடுதல்; ஏ.டி.எம்., இயந்திரத்தை பூட்டாமல் கவனக்குறைவாக செல்வது என, குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.


தனியார் வங்கிகளில் முறையாக செயல்படும் இந்த நிறுவனங்கள், தேசிய வங்கிகளில் முறையாக செயல்படுவதில்லை. உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, இந்த நிறுவனங்கள் மீது அதிக புகார்கள் வந்தன.தற்போது, பணத்தை நிரப்புவதில், இந்த நிறுவனங்கள் மிகவும் அலட்சியமாக செயல்படுகின்றன. விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட வேண்டும். அப்போது தான், இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

மூலக்கதை