கடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது!

தினமலர்  தினமலர்
கடலூர் லோக்சபா தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்தது!

விருத்தாசலம்;கடலுார் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சம பலத்தில் மோதுவதால், 13வது எம்.பி., யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19ம் தேதி, துவங்கியதை அடுத்து அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலுார் லோக்சபா தொகுதிக்கு கடந்த 1971ம் ஆண்டு முதல், 2014ம் ஆண்டு வரை நடந்த 12 தேர்தலில், காங்., 6 முறையும், அ.தி.மு.க.,- தி.மு.க., தலா இரண்டு முறையும், காங்., (இந்திரா), த.மா.கா., தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.கடலுார் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில், பா.ம.க., மாநில சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் கோவிந்தசாமியும், தி.மு.க., சார்பில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரமேஷ் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

கடலுார் லோக்சபா தொகுதியானது கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி) உள்ளிட்ட 6 தொகுதிகளை உள்ளடக்கியது.கடலுார், பண்ருட்டியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, திட்டக்குடியில் (தனி) தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும், விருத்தாசலத்தில் அ.ம.மு.க., ஆதரவு எம்.எல்.ஏ.,வும் உள்ளனர். அ.தி.மு.க., மற்றும் தி.மு.க, கூட்டணி கட்சியினர் சம பலத்தில் உள்ளதால் தொகுதியின் 13வது எம்.பி., யார் என்ற எதிர்பார்ப்பு கட்சி தொண்டர்கள் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
பா.ம.க., வேட்பாளர் கோவிந்தசாமி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவதோடு பிரசாரத்தையும் துவக்கி உள்ளார். அதே வேளையில் அதிருப்தியாளர்களை சரி கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளார். கோவிந்தசாமி முன்னாள் எம்.எல்.ஏ., என்பதால் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் நன்கு அறிமுகமானவர் என்றாலும் கூட, வெற்றி பெற கூட்டணி கட்சியினரின் பலத்தோடு கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.
தி.மு.க., வேட்பாளர் ரமேஷ், போதிய அளவில் தி.மு.க., வினருக்கே அறிமுகம் இல்லாதவர் என்ற கருத்தும் நிலவுகிறது. தற்போது வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்து வருகிறது. இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இவரும், வெற்றி பெற கூட்டணி கட்சியினரின் பலத்தோடு கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இவர், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவதோடு மட்டுமின்றி அதிருப்தியாளர்களை சரி கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

மூலக்கதை