ஐபிஎல் டி20 திருவிழா சீசன் 12: சென்னையில் இன்று கோலாகல தொடக்கம் முதல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி மோதல்

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20 திருவிழா சீசன் 12: சென்னையில் இன்று கோலாகல தொடக்கம் முதல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே  ஆர்சிபி மோதல்

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன் சென்னையில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது. கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் போட்டித் தொடர், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வெற்றிகரமாக 12வது சீசனை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள 11 தொடர்களில், சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 3 முறை கோப்பையை வென்று முன்னிலை வகிக்கின்றன. கொல்கத்தா அணி 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இம்முறை நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் களமிறங்குகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் உள்ளூர்/வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளன. இந்த சுற்றில் மொத்தம் 56 ஆட்டங்கள் மே 5ம் தேதி வரை நடைபெறும். முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் மோதி, பைனலுக்கு தகுதி பெற வேண்டும். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சிஎஸ்கே அணியுடன், விராத் கோஹ்லி தலைமையிலான ஆர்சிபி அணி மோதுகிறது. மூன்று முறை சாம்பியனான சூப்பர் கிங்ஸ் அணிக்கு, கேப்டன் டோனியின் அனுபவம் மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர்கள் பலரும் 30 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இவர்களது ஒருங்கிணைந்த ஆட்டம் மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம், கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் இதுவரை கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது. சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக வெற்றிகளைக் குவித்து வரும் கோஹ்லிக்கு இது கூடுதல் நெருக்கடியை கொடுத்துள்ளது. டி வில்லியர்ஸ், ஹெட்மயர், ஸ்டாய்னிஸ், கோஹ்லி ஆகியோரின் அதிரடி எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உலக கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், இந்த தொடரில் சிறப்பாக விளையாடி தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்க்க இளம் வீரர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். உள்ளூரில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் சென்னை அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். இரு அணிகளுமே சீசனை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. * ஆர்சிபி அணியுடன் 23 முறை மோதியுள்ள சிஎஸ்கே 15 வெற்றி, 7 தோல்வி கண்டுள்ளது (ஒரு போட்டியில் முடிவு இல்லை)* 2014ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணியுடன் நடந்த எந்த போட்டியிலும் சென்னைஅணி தோற்றது இல்லை.* ஐபிஎல் தொடரில் 5,000 ரன் மைல் கல்லை எட்ட ரெய்னாவுக்கு 15 ரன்னும், கோஹ்லிக்கு 52 ரன்னும் தேவை. சென்னை சூப்பர் கிங்ஸ்எம்.எஸ்.டோனி, முரளி விஜய், ஷேன் வாட்சன், கே.எம்.ஆசிப், சாம் பில்லிங்ஸ், சைதன்யா பிஷ்னோய், டுவைன் பிராவோ, தீபக் சாஹர், டு பிளெஸ்ஸி, ருதுராஜ் கெயிக்வாட், ஹ்ர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா, கேதார் ஜாதவ், நாராயண் ஜெகதீசன், மோனு குமார், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, மிட்செல் சான்டர், கரண் ஷர்மா, மோகித் ஷர்மா, துருவ் ஷோரி, ஷர்துல் தாகூர், டேவிட் வில்லி.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்விராத் கோஹ்லி, அக்‌ஷதீப் நாத், மொயீன் அலி, யஜ்வேந்திர சாஹல், நாதன் கோல்டர் நைல், கோலின் டி கிராண்ட்ஹோம், டி வில்லியர்ஸ், ஷிவம் துபே, குர்கீரத் மான் சிங், ஷ்ம்ரோன் ஹெட்மயர், ஹிம்மத் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, ஹெய்ன்ரிச் கிளாசன், மிலிந்த் குமார், முகமது சிராஜ், பவான் நேகி, தேவ்தத் படிக்கல், பார்திவ் பட்டேல், பிரயாஸ் ரே பர்மன், நவ்தீப் சாய்னி, டிம் சவுத்தீ, மார்கஸ் ஸ்டாய்னிஸ், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ்.

மூலக்கதை