போலி பங்கு ஆலோசனை நிறுவனங்களுக்கு தடை; முதலீட்டாளர்களுக்கு, ‘செபி’ எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
போலி பங்கு ஆலோசனை நிறுவனங்களுக்கு தடை; முதலீட்டாளர்களுக்கு, ‘செபி’ எச்சரிக்கை

புதுடில்லி: பங்கு முதலீட்டு ஆலோசனை வழங்குவதாக கூறி, முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் சுருட்டிய வலைதளங்களை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தடை செய்துள்ளது.

முதலீட்டு ஆலோசகர்கள் தொடர்பான சட்டத்தின் கீழ், செபியிடம் பதிவு செய்த நிறுவனங்கள், தனி நபர்கள் ஆகியோர் மட்டுமே, பங்கு முதலீட்டு ஆலோசனைகளை வழங்கலாம்; பத்திரிகை, ஊடகங்களில், பங்கு முதலீடு தொடர்பான பரிந்துரைகளை வெளியிடலாம்.ஆனால், பல நிறுவனங்கள், பதிவு செய்யாமல், பங்கு முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.

பல வலைதளங்கள், 99 சதவீத லாபம் உறுதி; பங்கு முதலீடுகளில், மாதம், குறைந்தபட்சம், 800 – -900 சதவீத லாபத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும் என, கவர்ச்சியாக விளம்பரங்களை வெளியிட்டு, ஆசையை துாண்டுகின்றன.

மாயம்:
அதில் மயங்கி, ஏராளமானோர், பங்கு முதலீடு தொடர்பான ஆலோசனைகளை பெற, சந்தாதாரர்களாக சேர்கின்றனர். இத்தகைய நிறுவனங்கள், 25 ஆயிரம் ரூபாய் வரை சந்தா வசூலிக்கின்றன.பணம் கிடைத்த சில நாட்கள் வரை, பரிந்துரைகளை வழங்கும் இது போன்ற நிறுவனங்கள், அதன் பின் மாயமாகி விடுகின்றன. அவற்றை தொலைபேசி, மின்னஞ்சல் போன்றவற்றின் மூலம் கூட தொடர்பு கொள்ள முடியாமல், முதலீட்டாளர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைகின்றனர்.

இது போன்ற புகார்கள் ஏராளமாக வந்ததை அடுத்து, செபி ஆய்வு மேற்கொண்டது. அதில், பதிவு செய்யாத பல வலைதளங்கள், சந்தா மூலம், 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் திரட்டி, முதலீட்டாளர்களை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

இணைப்பு:
சில வலைதளங்கள், முதலீட்டாளர்களை நம்ப வைக்க, செபி முத்திரையுடன், ‘அங்கீகரிக்கப்பட்டது’ எனவும், பங்கு ஆலோசகர் என்பதை குறிக்கும், பதிவு எண்ணை, ‘ஸ்கேன்’ செய்து, இணைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த முத்திரையை, ‘கிளிக்’ செய்தவுடன், செபி வலைதளத்திற்குள் நுழையும் வசதியும், வலைதளங்களில் காணப்படுகின்றன.இதையடுத்து, அத்தகைய வலைதளங்களை தடை செய்துள்ள செபி, இது தொடர்பான விபரங்களை, அனைத்து வங்கிகள், பங்குச் சந்தைகள், பங்கு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளது.

லாபகரமானது:
பங்குகளில் செய்யும் நீண்ட கால முதலீடு, பணவீக்கத்தை சமாளித்து, லாபகரமான வருவாயை அளிக்கக் கூடியது. ஆனால், குறுகிய காலத்தில், 800 சதவீத லாபம் ஈட்டுவது சாத்தியமில்லாதது.அதனால், நண்பர்கள், உறவினர்கள், போலி வலைதளங்களின் ஆலோசனைகளை கேட்டு பங்குகளில் முதலீடு செய்வதை, முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும். பதிவு பெற்ற, ஆலோசனை நிறுவனங்களின் பரிந்துரைப்படி முதலீடு செய்யலாம் அல்லது முதலீட்டிற்கு பாதுகாப்பான, பங்குகளில் முதலீடு செய்யும், ‘மியூச்சுவல் பண்டு’ திட்டங்களில் சேரலாம் என, செபி தெரிவித்துள்ளது.

கீழ்கண்ட வலைதளங்கள், பங்கு முதலீட்டு ஆலோசனை வழங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
www.trade4target.com
www.niftysureshot.com
www.mcxbhavishya.com
www.callput.in
www.newsbasedtips.com
www.futuresandoption.com
www.optiontips.in
www.commoditytips.in
www.sharetipslive.com
www.thepremiumstocks.com
www.callputoption.in
www.tradingtipscomplaints.com

மூலக்கதை