தமிழகம் முழுவதும் திமுக, அதிமுகவினர் இன்று ஒரேநாளில் வேட்புமனு தாக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம் முழுவதும் திமுக, அதிமுகவினர் இன்று ஒரேநாளில் வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று ஒரேநாளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அன்றைய தினம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் தமிழகத்தில் மக்களவை தொகுதிக்கு 48 பேரும், சட்டமன்ற தொகுதிக்கு 8 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.



தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன், இன்று பகல் 12. 10 மணிக்கு அடையாறு எல். பி. சாலையில் டெலிபோன் அலுவலகம் அருகே வந்தார். அங்கு ஏற்கனவே அதிமுக தொண்டர்கள் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர்.

அவர்களை சந்தித்த பிறகு, அங்கிருந்து ஊர்வலமாக அதே சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். அப்போது மாவட்டச் செயலாளர்கள் விருகை ரவி, தி. நகர் சத்யா, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் இருந்தனர்.

அதேபோல, வட சென்னையில் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ், அம்பேத்கர் கல்லூரி அருகே திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று பேசின்பாலம் அருகில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.



அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் வெங்கடேஷ்பாபு, ராேஜஷ், தேமுதிக மாவட்டச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர். அதேபோல, மத்திய சென்னையில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம்பால், சென்னை மாநகராட்சி 8வது மண்டல அலுவலகத்தில் 12. 30 மணிக்கு மனுதாக்கல் செய்தார்.

காஞ்சிபுரம்(தனி) தொகுதி திமுக வேட்பாளர் ஜி. செல்வம், கலெக்டர் பொன்னையாவிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது திமுக மாவட்டச் செயலாளர்கள் சுந்தர் எம்எல்ஏ, தாமோஅன்பரசன் எம்எல்ஏ மற்றும் எம்எல்ஏக்கள் எழிலரசன், ஆர். டி. அரசு, புகழேந்தி, நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

 காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தியிடம், பெரும்புதூர் திமுக வேட்பாளர் டி. ஆர். பாலு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவருடன் மாவட்டச் செயலாளர் தா. மோ. அன்பரசன் மற்றும் எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ். ஆர். ராஜா, இ. கருணாநிதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல, கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகர், நீலகிரி தியாகராஜன், ஈரோடு வெங்கு. மணிமாறன், திருப்பூர் எம். எஸ். எம். ஆனந்தன் ஆகியோர் இன்று பிற்பகல் 2 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.



தஞ்சை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் காந்தி மதியம் 1 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதேபோல, திமுக, அதிமுக வேட்பாளர்கள் பெரும்பாலானவர்கள் இன்று மனு தாக்கல் செய்தனர்.

சென்னையில் அதிமுகவினர் அதிகமானவர்கள் வேட்பாளர்களை வரவேற்க வந்ததால், தென் சென்னை மற்றும் வட சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. ஒரே நாளில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டி போட்டி மனு தாக்கல் செய்தனர்.

இன்று வேட்பு மனு தாக்கல் செய்யாதவர்கள் வருகிற 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

.

மூலக்கதை