அமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தேனியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தேனியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் போட்டி

சென்னை: அமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை தினகரன் இன்று வெளியிட்டார். இதில் தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து தங்க.

தமிழ்செல்வனும், தர்மபுரியில் அன்புமணியை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனும் போட்டியிடுகின்றனர். விளாத்திகுளம் மாஜி எம்எல்ஏ போட்டியிட மறுத்ததால் வேறு ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 24 மக்களவை தொகுதிகளுக்கும், 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.



தென் சென்னையில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, திருச்சியில் முன்னாள் மேயர் சாருபாலா, மதுரையில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரை உள்ளிட்ட ேவட்பாளர்கள் இடம் பெற்றனர். 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் 22ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என்று கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி. தினகரன் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டார். இதில் மீதியுள்ள 14 (புதுவை, மத்திய சென்னை தவிர்த்து) மக்களவை தொகுதிகளுக்கும், 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் தர்மபுரியில் பழனியப்பன், ஆரணியில் செந்தமிழன், வேலூரில் பாண்டுரங்கன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் மூன்று பேரும் முன்னாள் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



தினகரன் பின்வாங்கியது ஏன்?

தேனி  மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மகன்  ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம்  நடத்தியவர் ஓபிஎஸ்.

எனவே அவரது மகனை தோற்கடிக்க தினகரன் வியூகம் வகுத்து  வந்தார். ஒரு கட்டத்தில் அவரே கூட தேனி தொகுதியில் போட்டியிட இருப்பதாக  தகவல் பரவியது.

இதுகுறித்து கேட்ட போது, தேனி தொகுதியில் போட்டியிடுவது  பற்றி உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிப்பேன் என்று தினகரன் கூறி  இருந்தார். இந்த நிலையில் தினகரன் திடீரென பின்வாங்கி, தேனி தொகுதியில்  தங்க. தமிழ்செல்வனை வேட்பாளராக அறிவித்து விட்டார்.



இப்போது  ஆர். கே. நகர் எம்எல்ஏவாக தினகரன் உள்ளார். சட்டமன்ற தொகுதி என்றால் ஓரளவு  சமாளித்து விடலாம்.

மக்களவை தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகளை சமாளிக்க  வேண்டும். தோற்று விட்டால், இமேஜ் போய் விடும்.

இதனால் தான் தினகரன்  பின்வாங்கி விட்டதாக பரபரப்பாக கூறப்படுகிறது. அதேசமயம் தங்கதமிழ் செல்வனும் டப் பைட் கொடுக்க கூடிய வேட்பாளர் தான்.

அமமுகவின் கொள்கை பரப்பு  செயலாளர். எனவே ரவீந்திரநாத் குமார், தங்க தமிழ்செல்வன் இடையே தேனியில்  அனல் பறக்கும் பிரசாரம் இருக்கும் என்று இப்போதே பரபரப்பாக  பேசிக்கொள்கின்றனர்.

பெண் எம்எல்ஏவுக்கு சீட் இல்லை
 
தகுதி  நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் உமாமகேஸ்வரி.

விளாத்திக்குளத்தில்  இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவருக்கு இந்த தேர்தலில் தினகரன்  வாய்ப்பு வழங்கவில்லை.

விளாத்திக்குளத்தில் ஜோதிமணி என்பவர்  போட்டியிடுகிறார். அதேபோல் இன்று வெளியிடப்பட்ட பட்டியலில் ஒரு பெண்ணுக்கு  கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.



தகுதி நீக்க எம்எல்ஏக்கள் மூவருக்கு எம்பி சீட்

2ம் கட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்க தமிழ் செல்வன்(ஆண்டிப்பட்டி), பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), பார்த்திபன் (சோளிங்கர்) ஆகிய 3 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் ஆவர். இவர்களுக்கு இப்போது எம்பி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தங்க தமிழ் செல்வன் தேனி தொகுதியிலும், பார்த்திபன் அரக்கோணத்திலும், பழனியப்பன் தர்மபுரியிலும் போட்டியிடுகின்றனர். தங்க. தமிழ் செல்வன் ஓபிஎஸ் மகனை எதிர்த்தும், பழனியப்பன் அன்புமணி ராமதாசை எதிர்த்தும் களம் காண்கின்றனர்.


.

மூலக்கதை