கடலூர் தொகுதியில் தி.மு.க.,-பா.ம.க.,வேட்பாளர்கள் சுறுசுறுப்பு! வேட்பாளர் அறிவிப்பில் அ.ம.மு.க., வில் இழுபறி நீடிப்பு

தினமலர்  தினமலர்
கடலூர் தொகுதியில் தி.மு.க.,பா.ம.க.,வேட்பாளர்கள் சுறுசுறுப்பு! வேட்பாளர் அறிவிப்பில் அ.ம.மு.க., வில் இழுபறி நீடிப்பு

கடலுார்: கடலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க.,மற்றும் பா.ம.க.,வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தை துவக்கிவிட்ட நிலையில், அ.ம.மு.க.,சார்பில் யார் வேட்பாளர் என்ற சிக்கல் நீடித்து வருகிறது.கடலுார் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க.,கூட்டணி சார்பில் பா.ம.க.,வை சேர்ந்த டாக்டர் கோவிந்தசாமி போட்டியிடுகிறார்.
தி.மு.க.,சார்பில் ரமேஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இருவரும் களத்தில் இறங்கி விட்டனர்.கடலுாரில் நேற்று முன்தினம் நடந்த அ.தி.மு.க.,கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில், பா.ம.க.,வேட்பாளரை ஆதரித்து, பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ், அமைச்சர் சம்பத், அருண்மொழித்தேவன் எம்.பி., ஆகியோர் மினி தேர்தல் பிரசாரத்தை நடத்தி முடித்துவிட்டு, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு தயாராகி விட்டனர்.தி.மு.க.,வேட்பாளர் ரமேஷ், கடலுார் லோக்சபா தொகுதியிலுள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.இவர்கள் தேர்தல் வேலையில் ஈடுபட்டு வரும் வேலையில், அ.ம.மு.க., மற்றும் மக்கள் நீதி மையம் ஆகிய கட்சி வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது.
இதற்கிடையில் அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் தினகரன், லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 17ம் தேதி வெளியிட்டார். அந்த பட்டியலில் கடலுார் தொகுதிக்கான வேட்பாளர் பெயர் இடம் பெறவில்லை. சிதம்பரம் தொகுதிக்கான வேட்பாளர் பெயர் இடம் பெற்றிருந்தது.
கடலுார் லோக்சபா தொகுதி, அ.ம.மு.க., சார்பில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும், தமிழக வாழ்வு உரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிடுவார் என்ற பேச்சு இருந்து வந்த நிலையில், வேல்முருகன் திடீரென்று, தி.மு.க.,கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து விட்டதால், கடலுார் தொகுதியில் அ.ம.மு.க.,சார்பில் வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதனால் அ.ம.மு.க., தொண்டர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.இதேபோல் மக்கள் நீதி மையத்தின் முதல் வேட்பாளர் பட்டியல் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது.
அதில் கடலுார் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் தொகுதிக்கு வேட்பாளராக ரவி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் கடலுார் தொகுதிக்கான வேட்பாளர் பெயர் இடம் பெறவில்லை.கடலுார் லோக்சபா தொகுதிக்கு, மக்கள் நீதி மையத்தின் வேட்பாளராக குமரவேல் அறிவிக்கப்பட இருந்த நிலையில், அவர் திடீரென்று கட்சியிலிருந்து விலகிவிட்டதால், கடலுார் தொகுதியில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று கட்சித்தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 26ம் தேதி கடைசி நாளாகும். குறுகிய நாட்களே இருப்பதால், அ.ம.மு.க., கட்சி சார்பில் யார் போட்டியிடுவர் என்ற சிக்கல் நீடித்து வருகிறது.
அ.தி.மு.க.,வின் ஓட்டுக்களை, அ.ம.மு.க.,சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பிரித்து விடுவார் என்ற பேச்சு இருந்து வரும் நிலையில், கடலுார் லோக்சபா தொகுதியில் இதுவரை அ.ம.மு.க.,சார்பில் யார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படாமல் உள்ளது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை