தேர்தலால் மணல் கொள்ளையர் கொண்டாட்டம் போடுறாங்க!

தினமலர்  தினமலர்
தேர்தலால் மணல் கொள்ளையர் கொண்டாட்டம் போடுறாங்க!

பேரூர்:நொய்யல் ஆற்றில் முகாமிட்டுள்ள மணல் திருட்டு கும்பல், கழுதைகள், டூவீலர்களில் மணலை கடத்தி, மறைவான இடங்களில் பதுக்கி, விற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவையில் கடந்த ஆண்டு, 270 மி.மீ.,க்கும் அதிகமாக, மழை கொட்டி தீர்த்தது. சாடிவயல் சின்னாறு, பெரியாறு, சிற்றோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால், நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
நொய்யல் ஆற்றுப்பாதையெங்கும் மணல் வளம் அதிகரித்தது. கடந்த காலங்களில், நொய்யல் ஆற்றில் மணல் கடத்தல் இரவு, பகல் என்றில்லாமல் எப்போதும் நடந்தது. இயற்கை ஆர்வலர்களின் முயற்சியால், மணல் கடத்துவோருக்கு எதிராக மாவட்ட நிர்வாகம், குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது; கடத்தல் கட்டுக்குள் இருந்தது.தேர்தல் வந்ததால் கொண்டாட்டம்!இந்நிலையில் தான், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதை, அரசியல்வாதிகள் எதிர்பார்த்திருந்தனரோ இல்லையோ, மணல் கடத்தல் கும்பல் எதிர்பார்த்திருந்தது போலும். தேர்தல் பணிக்கு வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் சென்று விட்டதால், மீண்டும் மணல் கொள்ளையை ஆரம்பித்து விட்டனர்.இருட்டுப்பள்ளம் துவங்கி, மாதம்பட்டி வரையுள்ள ஆற்றுப்பகுதிகளில், இரவு, 9:00 மணிக்கு மேல் முகாமிட்டு, கழுதைகள், டூவீலர்களில் மணல் கடத்துகின்றனர். இப்படி அதிகாலை, 3:00 மணி வரை நடைபெறும் மணல் திருட்டால், ஆற்று வழித்தடங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.மணல் கடத்துவதற்காக கழுதைகள், டூவீலர்கள் ஆற்றின் கரைகளில் மறைவான இடங்களில் நிறுத்துகின்றனர்.
மணல் லோடு ஏற்ற ஒரு கழுதை, ஒரு முறை சென்று வருவதற்கு, 100 ரூபாயும், டூவீலருக்கு, 200 ரூபாயும் வழங்கப்படுகிறது.ஒரு லோடு மணல், ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் விற்கப்படுவதால், கடத்தல் நபர்களுக்கு லாபம் கொழிக்கிறது. கண்காணிப்பு இல்லை, நல்ல வருவாய் கிடைப்பதால், இயற்கையை நாசமாக்கி காசு பார்க்க, ஏராளமானோர் நொய்யல் ஆற்றில் முகாமிட்டுள்ளனர்.ஆற்றுநீரை உறிஞ்சி வைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, ஆற்று மணலே என்பதால், திருட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை