எல்லையில் துப்பாக்கிச்சூடு இந்திய வீரர் வீரமரணம்

தினகரன்  தினகரன்
எல்லையில் துப்பாக்கிச்சூடு இந்திய வீரர் வீரமரணம்

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பாகிஸ்தானில் பாலக்கோட்டில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் இருந்து காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றது. ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 110 முறை பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை தாக்குதலை தொடங்கியது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும், பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் வீரர் கரம்ஜித் சிங் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்றார்.இதற்கிடையே பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூரில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது கையெறி குண்டை வீசிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் டாங்கிவச்சா காவல்நிலைய அதிகாரி உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கையெறி குண்டு வீச்சை அடுத்து அந்த பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோல் இங்குள்ள களன்டாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு விரைந்த வீரர்கள் தீவிரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு வீரர்களும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

மூலக்கதை