ஐபிஎல் விளையாட ஷகிப் அல் ஹசனுக்கு அனுமதி!

PARIS TAMIL  PARIS TAMIL
ஐபிஎல் விளையாட ஷகிப் அல் ஹசனுக்கு அனுமதி!

 வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆட வங்கதேச கிரிக்கெட் வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கதேச வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடிவிட்டு நாடு திரும்பும் போது காயம் அடைந்து வருகின்றனர். இதனால் சில வீரர்களை அந்த நாடு ஐபிஎல் தொடரில் ஆட அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஷாகிப் அல் ஹசனின் மட்டும் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான அனுமதித்துள்ளது.

 
ஓராண்டு தடைக்குப் பின் அணிக்குத் திரும்பியுள்ள டேவிட் வார்னர், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் வருகை, கப்தில், பேர்ஸ்டோ, வில்லியம்ஸன் என அசுரபலத்துடன் ஐபிஎல் போட்டியில் கோப்பை கனவுடன் களமிறங்குகிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
 
இந்த அணி பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என எதிலுமே அணியை குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்கு வலுவாக இருக்கிறது. தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவதற்கு இது சரியான வாய்ப்பாகும்.
 
கடந்த நியூஸிலாந்து, ஆஸ்திரேலியத் தொடரில் விஜய் சங்கர் விளையாடியபோதிலும் தேர்வாளர்களை ஈர்க்கும் அளவுக்கு அவரின் ஆட்டம் அமையவில்லை. ஆனால், இதில் அவரின் ஆட்டம் ஜொலிக்கும் பட்சத்தில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறலாம்.
 
கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்குள் நுழைந்த சன் ரைசர்ஸ் அணி 6 சீசன்களில் இருமுறை மட்டுமே லீக் சுற்றோடு விடைபெற்றது. ஆனால், இருமுறை ப்ளை ஆப் சுற்றிலும், ஒருமுறை சாம்பியன் பட்டத்தையும், கடந்த ஆண்டு 2-வது இடத்தையும் பெற்று சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
 
இதுவரை ஐபிஎல் சீசனில் 93 ஆட்டங்களில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் அணி 51 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 41 தோல்விகளைச் சந்தித்துள்ளது, ஒரு ஆட்டம் டையில் முடிந்துள்ளது.
 
சன் ரைசர்ஸ் அணி ஐபிஎல் தொடருக்குள் நுழைந்ததில் இருந்து அணியில் அதிக ரன் குவித்தவர் டேவிட் வார்னர் மட்டுமே. டேவிட் வார்னர் 2,579 ரன்களும், பந்துவீச்சில் புவனேஷ்வர்குமார் 112 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
 
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஓராண்டு தடை விதிக்கப்பட்டதால், கடந்த சீசனில் டேவிட் வார்னரால் விளையாட முடியாமல் போனது. ஆனால், இந்த சீசனுக்கு அவர் அணிக்குள் திரும்பி இருப்பது மிகப்பெரிய பலமாகும். ஆனால், கடந்த சீசனில் டேவிட் வார்னர் இல்லாத குறையை கேப்டனாக இருந்த கேன் வில்லியம்ஸன் போக்கினார். பேட்டிங்கிலும், கேப்டன்ஷிப்பிலும் பட்டையைக் கிளப்பி அணியை பைனல் வரை நகர்த்தினார். ஆனால், இப்போது வில்லியம்ஸன் தோள்பட்டை காயத்தில் சிகிச்சை பெற்றுவதால், அணியில் விளையாடுவாரா எனத் தெரியவில்லை.
 
சன் ரைசர்ஸ் அணியில் இருந்த முக்கிய பேட்ஸ்மேன் ஷிகர் தவணுக்கும், அணி நிர்வாகத்துக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதையடுத்து, அவரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்தது சன் ரைசர்ஸ் நிர்வாகம். அதற்கு பதிலாக அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், ஷாபாஷ் நதீம் ஆகியோரை பெற்றுக்கொண்டது.
 
மேலும், வெளிநாடுகளில் இருந்து நியூஸிலாந்து வீரர் மார்டன் கப்தில், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, காயத்தால் வெளியே அனுப்பப்பட்ட விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா ஆகியோர் வாங்கப்பட்டனர். இதனால் வலுவான பேட்டிங் அமைந்துள்ளது.

மூலக்கதை