வியாபாரிகளை பிழிந்து எடுக்கும் தேர்தல் பறக்கும் படையினர்: பணம் பறிபோவதால் சிறு தொழில் முடக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வியாபாரிகளை பிழிந்து எடுக்கும் தேர்தல் பறக்கும் படையினர்: பணம் பறிபோவதால் சிறு தொழில் முடக்கம்

நெல்லை: தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி வியாபாரிகளை குறி வைத்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்வதால் தொழில் முடக்கம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப். 18ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியான கடந்த 10ம் தேதி முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதையடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணமின்றி பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது. தேர்தல் பறக்கும் படையினரின் நடவடிக்கையால் நெல்லை மாவட்டத்தில் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக பணகுடி, காவல்கிணறு, சுரண்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாழை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இங்கிருந்து கேரளாவிற்கு வாழைக்காய் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள், தொழிலுக்கு தேவையான பணத்தை கடைகளில் வசூல் செய்தே எடுத்து வருகின்றனர்.

ஆனால் அவர்கள் வரும் வழியில் பணகுடி, காவல்கிணறு பகுதியில் நடைபெறும் வாகன சோதனையில் பறக்கும் படையினர் பணத்திற்கு ஆவணம் கேட்கின்றனர். இந்த சிறு வியாபாரிகளிடம் ஆவணம் எதுவும் இருக்காது என்பதால் பறக்கும் படையினரிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. காவல்கிணறு பகுதியில் காமராஜர் காய்கறி மற்றும் கமிஷன் மார்க்ெகட்டில், 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

கேரள வியாபாரிகள் அதிகம் வந்து செல்லும் இந்த மார்க்கெட்டில், தற்போதைய தேர்தல் கெடுபிடியால் வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது.

இதுகுறித்து காவல்கிணறு வியாபாரிகள் சங்க தலைவர் மாம்பழ சுயம்பு கூறுகையில், தேர்தல் விதிமுறையால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். வாரம் ஒருமுறை காய்கறிகள் விற்பனை செய்த பணத்தை வசூல் செய்ய செல்லும்போது சில நேரம் ரூ. 25 ஆயிரமும் கிடைக்கும்.

ரூ. 1 லட்சமும் கிடைக்கும். ஆனால் இந்த பணத்திற்கு பில் வைத்துதான் கொண்டு வர வேண்டும் என்பது ஏற்கக் கூடியதல்ல.

சிறிய வியாபாரிகளிடம் பில் இருப்பது சாத்தியமில்லாதது. எனவே வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பண கட்டுப்பாட்டை ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாக வைத்துக் கொள்ள அனுமதி அளிக்க தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தேர்தல் விதிமுறையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.

நாங்கள் சந்தைக்கு ரூ. 1 லட்சத்துடன் சென்றால் 10 ஆடுகளை வாங்கி ஆட்டுக்கு ரூ. 500 லாபம் வைத்து கைமாத்தி விடுவோம். இதனால் எங்களுக்கு வாரத்துக்கு ரூ. 5 ஆயிரம் வரை கிடைக்கும்.

தற்போது வியாபாரத்துக்கு பணத்தை எடுத்துச் செல்ல முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக வருமானமின்றி கஷ்டப்படுகிறோம்.

எனவே வியாபாரிகள், விவசாயிகளுக்கு பண கட்டுப்பாடு விவகாரத்தில் தளர்வு ஏற்படுத்த வேண்டும்.

சிறு, குறு வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் பறக்கும் படையினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும், என்றனர்.

.

மூலக்கதை