ஏம்பா.. உன் சின்னம் என்னப்பா...? அமமுக வேட்பாளர்களை கலாய்க்கும் மக்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏம்பா.. உன் சின்னம் என்னப்பா...? அமமுக வேட்பாளர்களை கலாய்க்கும் மக்கள்

திருச்சி: இன்னும் சின்னமே ஒதுக்கப்படாத நிலையில், பிரசாரத்துக்கு செல்லும் அமமுக வேட்பாளர்களை மக்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலில் அமமுக, எஸ்டிபிஐயுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 1 மக்களவை தொகுதி போக, மீதியுள்ள 38 தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக களம் காண்கிறது. முதல்கட்டமாக 24 மக்களவை தொகுதிகளுக்கும், 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார்.

2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் கூறி உள்ளார். முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட அமமுக வேட்பாளர்கள் தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், நேற்றுமுன்தினம் ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோயிலில் இருந்து நடந்து சென்று வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். பெரும்புதூர் தொகுதி வேட்பாளர் நாராயணன் நேற்று தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நடைப்பயிற்சி சென்றவர்களிடம் ஓட்டு கேட்டார்.

இதேபோல் வேட்பாளர்கள் பலரும்  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமமுக கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

குக்கர் சின்னம் மீண்டும் ஒதுக்கப்படாது என்றே கூறப்படுகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னம் ஒதுக்கப்படுமா, அல்லது தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்படுமா என்பதிலும் குழப்பம் நிலவுகிறது.

ஆனாலும் சின்னத்தை பற்றி கவலைப்படாமல் அமமுக வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரசாரத்துக்கு செல்லும் அமமுக வேட்பாளர்களை மக்கள் கலாய்த்து வருகின்றனர்.

இன்னும் சின்னமே ஒதுக்காத நிலையில், ஓட்டு கேட்டு வருவது வேடிக்கையாக உள்ளது. அப்படியே ஓட்டுப்போட நினைத்தாலும் எந்த சின்னத்துக்கு ஓட்டு போடுவது என்று மக்கள் தங்களுக்குள் வேடிக்கையாக பேசிக்கொள்கின்றனர்.


.

மூலக்கதை