அதிமுகவில் சீட் கிடைக்காத 30 எம்பிக்களும் பம்மியது ஏன்?: பரபரப்பு தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுகவில் சீட் கிடைக்காத 30 எம்பிக்களும் பம்மியது ஏன்?: பரபரப்பு தகவல்கள்

திருச்சி: அதிமுகவில் சீட் கிடைக்காத 30 எம்பிக்களும் அமைதியாக இருப்பது ஏன் என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 37 தொகுதிகளில் வென்றது.

ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்த தேர்தலில் பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 20 மக்களவை தொகுதிகளில் அதிமுக களம் காண்கிறது.

இதில் தம்பிதுரை, மரகதம் குமரவேல் உள்ளிட்ட சிட்டிங் எம்பிக்கள் 6 பேருக்கு மட்டும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் எம்பி ராஜேந்திரன் விபத்தில் இறந்து விட்ட நிலையில், 30 சிட்டிங் எம்பிக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு 3 நாட்களுக்கு மேலாகியும், சீட் கிடைக்காத எம்பிக்கள் யாரும் இதுவரை போர்க்கொடி தூக்கவில்லை. அன்வர் ராஜா, ப. குமார் உள்ளிட்ட சீனியர் எம்பிக்கள் கூட வாய் திறக்காமல் மவுனமாக உள்ளனர்.

இத்தனைக்கும் அனைத்து எம்பிக்களுமே மீண்டும் சீட் கேட்டு விருப்ப மனு அளித்திருந்தனர்.

ஆனாலும் சீட் கிடைக்காத அதிருப்தியை 30 எம்பிக்களும் வெளிக்காட்டாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு: சீட் கேட்டு விண்ணப்பித்த சிட்டிங் எம்பிக்களிடம், பூத் கமிட்டி செலவு, பிரசாரம், பொதுக்கூட்ட ெசலவு உள்பட ‘எல்லா’ செலவுகளையும் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறி விட்டது.

பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அளிக்கும் பணம், பிரசாரம், ெபாதுக்கூட்ட செலவு ஆகியவற்றை கூட்டிக்கழித்து பார்த்தால், ஒரு தொகுதிக்கு எப்படியும் பல கோடி வரை செலவழிக்க வேண்டி உள்ளது. ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத நிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்க இருக்கிறது.

இதில் வெற்றி பெற முடியுமா என்று தெரியவில்லை. மக்களின் மன நிலையும் எப்படி உள்ளது என்பதை கணிக்க முடியவில்லை.

எனவே ரிஸ்க் எடுக்க வேண்டாம். ஒருவேளை இந்த தேர்தலில் அதிமுக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றால், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

சிட்டிங் எம்பிக்கள் பலர் அதிருப்தியில் இருந்தாலும், அவர்கள் அமைதியாக இருக்க இதுதான் காரணம் என்று கூறினர்.  

.

மூலக்கதை