தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு

* கோடை விடுமுறையால் அடுத்த மாதம் மேலும் உயரும் அபாயம்புதுடெல்லி: விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால் விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் பல இயக்கப்படாமல் உள்ளன. விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால் விமான பயணிகளும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். கடைசி நேர புக்கிங் பரபரப்புகளால் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்து விட்டது. ஏற்கெனவே போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை விதித்து விட்டதால் விமான கட்டணங்கள் உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் கட்டண உயர்வு ஏற்பட்டு விட்டது.    சென்னை - மும்பை இடையே 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் கட்டணம் சராசரியாக டிக்கெட்டுக்கு ரூ.5,000  அதிகரித்து விட்டது. ஒரு வாரம் முன்பு முன்பதிவு செய்யும்போது மேற்கண்ட வழித்தடத்தில் சாதாரணமாக ரூ.3,500 முதல் ரூ.6,000 வரை இருந்தது. இது ரூ.6,245 முதல் ரூ.17,000 வரை உள்ளது.  இந்த மாத இறுதி வரை சென்னை - கோவை வழித்தடத்தில் 1 விமானம், கோவை - சென்னை வழித்தடத்தில் 2 மவிமானங்கள், டெல்லி- சென்னை, சென்னை - போர்ட் பிளேர், போர்ட்பிளேர் - சென்னை இடையே தலா ஒரு விமானம், சென்னை - புனே, சென்னை - டெல்லி இடையே தலா 3 விமானங்கள், புனே - சென்னை இடையே 4 விமானங்கள் இந்த மாத இறுதி வரை ரத்து செய்யப்பட்டு விட்டன. சென்னையில் இருந்து மட்டும் சுமார் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை - மும்பை வழித்தடத்தில் ஏராளமான விமானங்கள் ரத்தானதால்தான், மற்ற வழித்தடங்களை விட மேற்கண்ட தடத்தில் விமான கட்டணம் பல மடங்கு எகிறி விட்டது. அடுத்த மாதத்தில் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கி விடும். அப்போது பயணிகளின் டிக்கெட் தேவை உயரும். எனவே தற்போது இருப்பதை விட அடுத்த மாதம் விமான டிக்கெட்கள் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை