ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன்: பாகிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன்: பாகிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை

இஸ்மாலாபாத்: பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலால் நாடே கொந்தளித்தது. இந்த தீவிரவாத அமைப்புக்கும், இதை சீராட்டி வரும் பாகிஸ்தானுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் மக்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் ஆவேசப்பட்டனர். ‘தீவிரவாதிகளை அழிக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து, புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, கடந்த மாதம் 26-ம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில், இந்திய விமானப்படை போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின. இதில், பாலகோட்டில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கியமான முகாம் தகர்க்கப்பட்டு, 350 தீவிரவாதிகள் கூண்டோடு கொல்லப்பட்டனர். இந்த 90 வினாடி தாக்குதலில் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. சக்தி வாய்ந்த இந்திய விமானங்களை தடுக்க வந்த பாகிஸ்தானின் எப்-16 போர் விமானங்கள், மிரண்டு போய் பின்வாங்கின. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் இந்திய விளம்பரங்கள் உள்ளிட்டவை அந்நாட்டில் ஒளிபரப்ப தடைவிதித்திருந்தது. இதனை போன்று இந்தியாவிலும், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டது. இதற்கிடையே, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன், மார்ச் 23ம் தேதி சென்னையில் கோலாகலமாகத் தொடங்குகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் எம்.எஸ்.டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன், விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

மூலக்கதை