காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து நிஜிடி விலகல்: சென்னை சூப்பர் கிங்க்சுக்கு பின்னடைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து நிஜிடி விலகல்: சென்னை சூப்பர் கிங்க்சுக்கு பின்னடைவு

கேப்டவுன்: விலாவின் தசைப்பகுதியில் ஏற்பட்டுள்ள உள்காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிஜிடி, ஐபிஎல் தொடரில் ஆட முடியாது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை அணிக்கு இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிஜிடி, கடந்த சீசன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி, 7 போட்டிகளில் பல முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   நடப்பு தொடரில் ஆடவுள்ள சென்னை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக அவர் கருதப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் நடந்த இலங்கைக்கு எதிரான 5வது போட்டியின் போது, விலாவின் தசைப்பகுதியில் அவருக்கு உள்காயம் ஏற்பட்டது.

இதனால் உடனடியாக அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

பின்னர் நடந்த ஸ்கேன் முதலான பரிசோதனைகளில் விலாவின் தசைப்பகுதியில் அவருக்கு கிரேட் 2 வகையிலான உள்காயம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் கட்டாயமாக 4 வார காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ‘‘4 வாரங்களுக்கு பின்னர் அவருக்கு சில டெஸ்ட்கள் பரிந்துரைக்கப்படும்.

அதன் முடிவுகளை பொறுத்தே அவர் போட்டிகளில் பங்கேற்பது குறித்த முடிவு எடுக்கப்படும்‘‘ என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து நடப்பு ஐபிஎல் தொடரில் அவரால் இடம் பெற முடியாது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சென்னை அணியில் இவரையும் சேர்த்து இரண்டு ஓவர்சீஸ் வேகப்பந்து வீச்சாளர்களே இடம் பெற்றுள்ளனர்.



இப்போது நிஜிடி ஆட முடியாத நிலையில் மற்றொரு பவுலிங் ஆல்ரவுண்டரான  இங்கிலாந்தின் டேவிட் வில்லிக்கு கூடுதல் சுமை என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஷர்துல் தாகூர், மோகித் ஷர்மா, தீபக் சாஹர் மற்றும் கே. எம். ஆசிஃப் என வாய்ப்புக்காக காத்திருக்கும் இந்திய பந்து வீச்சாளர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்த இது நல்ல தருணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நாளை மறுநாள் (23ம் தேதி) இந்த ஆண்டின் ஐபிஎல் கோலாகலமாக துவங்க உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து மோதவுள்ளது.

4 வார ஓய்வுக்கு பின்னர், ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு நிஜிடி முழுவதுமாக தகுதி பெற்று விடுவார் என்று தென்னாப்பிரிக்க அணியின் மேலாளர் டாக்டர் மொகமது மூசாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


.

மூலக்கதை