கூட்டணி பலத்தில் வி.சி., - அ.தி.மு.க மோதல்!.,...களை கட்ட துவங்கியது சிதம்பரம் தொகுதி

தினமலர்  தினமலர்
கூட்டணி பலத்தில் வி.சி.,  அ.தி.மு.க மோதல்!.,...களை கட்ட துவங்கியது சிதம்பரம் தொகுதி

சிதம்பரம்: கூட்டணி பலத்துடன் அ.தி.மு.க.,- வி.சி., கட்சிகள் மோதலுக்கு தயாராகி விட்டதால், சிதம்பரம் தொகுதி களை கட்ட துவங்கியுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் அரியலுார்மாவட்டத்தில் அரியலுார், ஜெயங்கொண்டம், பெரம்பலுார் மாவட்டத்தில் குன்னம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது, சிதம்பரம் லோக்சபா தனித்தொகுதி.காங்கிரஸ் கட்சி கோட்டையாக இருந்த இத்தொகுதி, தி.மு.க., வுக்கு கைமாறியது.
அடுத்து மூன்று முறையும் பா.ம.க., தொகுதியை கைப்பற்றியது. ஆனால், மூன்று கட்சிகளுமே இந்த தேர்தலில் போட்டியில் இருந்து பின்வாங்கிவிட்டன.தொகுதியில் 1999 முதல் தொடர்ந்து நான்கு முறை போட்டியிட்டு, ஒரே ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்ற வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், ஐந்தாவது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.தி..மு.க., காங்., கட்சிகள், சிதம்பரம் தொகுதியை வலியுறுத்தி கேட்டிருந்த நிலையில், சிதம்பரம் தொகுதி தான் வேண்டும் என, வலியுறுத்தி வாங்கி விட்டார் திருமாவளவன்.கடந்த தேர்தலில் திருமாவளவனை வீழ்த்திய அ.தி.மு.க., மீண்டும் மோதலுக்கு தயாராகி விட்டது.
அ.தி.மு.க., சார்பில், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் போட்டியிடுகிறார். அரசு தலைமை கொறடா தாமரை. ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் ஆதரவுடன் இவர் வேட்பாளராகியுள்ளார்.அ.ம.மு.க சார்பில், வழக்கறிஞர் இளவரசன் போட்டியிடுகிறார் என்றாலும், வி.சி., - அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு அவரால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
அதே சமயத்தில், தொகுதியில் வி.சி., மற்றும் அ.தி.மு.க., இரு கட்சிகளுக்குமே தனிப்பட்ட செல்வாக்கு இல்லாத நிலையில், தி.மு.க., காங்., ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி பலத்தில் வி.சி., கட்சி வேட்பாளரும், பா.ம.க., தே.மு.தி.க.,. பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் பலத்தில் அ.தி.மு.க., வேட்பாளரும் மோதலுக்கு தயாராகி விட்டனர்.வி.சி., கட்சி வேட்பாளர் திருமாவளவன் இன்று முதல் சிதம்பரம் தொகுதியில் சட்டசபை தொகுதி வாரியாக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்.
அதேபோன்று அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகரன் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை நேற்று சந்தித்து ஆதரவு திரட்டினார். தேர்தல் பணியை இன்று முதல் வேட்பாளர்கள் துவக்குவதால், தொகுதியில் தேர்தல் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.சிதம்பரம் தொகுதியில் கடந்த நான்கு தேர்தல்களாக வி.சி., கட்சிக்கும் பா.ம.க., வுக்கும் இடையே நேரடி மோதல் இருந்ததால், பரபரப்புக்கு பஞ்சமில்லாத தொகுதியாக விளங்கியது. தற்போது அ.தி.மு.க., போட்டியிட்டாலும் கூட்டணியில் பா.ம.க., இருப்பதால் தேர்தல் களம் களைகட்டத் துவங்கியுள்ளது.

மூலக்கதை