எதில் இருக்குது வெற்றி?

தினமலர்  தினமலர்
எதில் இருக்குது வெற்றி?

ஜெயலலிதா காலத்துக்கு முன்னர், கூட்டணி என்பது, கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனான, நட்பை அடிப்படையாக கொண்டிருந்தது. தி.மு.க.. - காங்., கூட்டணி முதலில் ஏற்பட்ட போதும், அடுத்தடுத்து ஏற்பட்ட போதும், அது பொருந்தாக் கூட்டணி என்றே சொல்லப்பட்டது. அ.தி.மு.க., -- காங்., கூட்டணி அமைந்த போது, அது, இயல்பான கூட்டணி என, நம்பப்பட்டது. இன்று, நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. கூட்டணிகள் மாறுவதும், கூட்டணி குறித்த கருத்துக்கள் மாறுவதும், மாநிலங்களில், சிறிய கட்சிகள் ஓரளவுக்கு ஓட்டுகள் வாங்கியதில் இருந்து, இயல்பாகி விட்டது.

கடுமையான சாடல்:


பா.ம.க., ஒவ்வொரு தேர்தலிலும், ஒவ்வொரு பிரதான கட்சியுடன் மாறி மாறி கூட்டணி வைத்தது. தொடர்ந்து, வெற்றி முகத்திலும் இருந்தது. கூட்டணி மாறும் போது ஏற்படும் குரல் மாறுபாடுகளை, மிக எளிதில், பா.ம.க., கடந்ததற்கு, வெற்றி கூட்டணியாக அமைந்தது தான் காரணம். தோல்வி கூட்டணியாக அமைந்தபோதெல்லாம், கூட்டணி மாறும் போது, மிக கடுமையான காரணங்களைத் தேடி தேடி, பா.ம.க., சொல்ல வேண்டி வந்தது. மீண்டும் அடுத்த கூட்டணியின் போது, அதை விட கடுமையான சாடல்களை, காரணங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனாலேயே, தற்போது, பதில் சொல்ல முடியாத சிக்கலிலும் மாட்டியுள்ளது.

கருணாநிதியும், ஜெயலலிதாவும், இதை வேறு வகையில் கையாண்டனர். கருணாநிதி, இதயத்தை பிழியும் வண்ணம் கட்டுரை எழுதினார். கூட்டணி முறிந்தாலும், கொள்கை ரீதியாக அவர்களின் நட்பு தேவை என்பதை, கவனத்தில் வைத்திருந்தார். மீண்டும், தேர்தலில் அவர்களுடன் கூட்டணி எந்நேரத்திலும் ஏற்படலாம் என்பதில், அவருக்கு சந்தேகமே இருந்தது இல்லை. ஜெயலலிதா கையாண்டது, இதற்கு முற்றிலும் எதிரானது. கூட்டணிக்கு முன்னரோ, பின்னரோ, கூட்டணியின் போதோ, கூட்டணி கட்சிகளைப் பற்றி எதுவும் பேச மாட்டார். பாராட்டியோ, திட்டியோ எதுவும் செய்யமாட்டார்.

அப்படி, அவர் பாராட்டினால், அது கூட்டணி கட்சிகளுக்கு இன்ப அதிர்ச்சி என்ற வகையில், மிக அபூர்வமாகவே இருக்கும்.அதேபோல, கூட்டணி கட்சித் தலைவர்களுடன், அவருக்கு நட்பு என்ற, ஒன்றே கிடையாது. கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டுமே என்பதை, ஒவ்வொரு நொடியிலும் நிரூபித்த வண்ணம் இருந்தார்.கூட்டணிக்கு வரும் கட்சிகளை பொதுவில் துதிபாடுவது, புகழ்ந்துரைப்பது போன்ற செயல்கள் எதுவும் இருக்காது. கூட்டணி பேச்சின் போதே, அ.தி.மு.க.,வின் தொகுதிப் பட்டியலை வெளியிடுவார். அதற்கு பிறகும், கூட்டணி கட்சிகள், அவரிடம் கூட்டணி வைத்ததன் காரணம், வெற்றி என்ற ஒற்றை சொல் தான்.வெற்றி கிடைக்காத சமயத்தில், கூட்டணி கட்சிகள் விலகும் போது, ஜெயலலிதாவிடம் இருந்து, அது குறித்த, மனதை பிசையும் அறிக்கைகள் எதுவும் இருக்காது. மறந்தும் கூட்டணி தலைவர்களின் பெயரை கூட உச்சரித்துவிட மாட்டார்.

தோல்வி கூட்டணி:


இந்த வகையில், மாநில சிறு கட்சிகளின் இடத்தை, அவர்களுக்கு காண்பித்தது ஜெயலலிதா தான். இது, தி.மு.க.,வுக்கும் சேர்த்தே உதவியது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி கூட்டணி இல்லாமலும் அ.தி.மு.க., வென்றதில், ஜெயலலிதாவின் அதிர்ஷ்டத்துக்கும் ஒரு பங்கு இருந்தது.முன்பெல்லாம் கூட்டணி என்ற ஒன்று அமைந்தால், அனைத்து கூட்டணி தலைவர்களும், ஒரே மேடையில் பேசுவது, முக்கியமான ஒன்றாகஅமையும். ஜெயலலிதா இதையும் புறக்கணித்தார். வெற்றி கூட்டணியாக அமைந்து விடும்போது, இதெல்லாம் மறக்கப்பட்டு விடும். தோல்வி கூட்டணியாக அமைந்தால், இது முக்கிய காரணமாக பேசப்படும். கூட்டணி அமைப்பது போல முக்கியமானது, அதை எடுத்துச் செல்வது. ஆதரவு தருவதை போலவே முக்கியமானது, அதனை ஏற்றுக்கொள்வது.

பெரிய அபாயம்:


அ.தி.மு.க., கூட்டணிக்கு அந்த சிக்கல் இருக்கிறது. ஜெயலலிதா இல்லாத நிலையில், இந்த சிக்கலை இவர்கள் எளிதாக கடந்துவிட முடியும். அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி, எவ்வித, 'ஈகோ'வும் இன்றிப் பேசுவதால், கூட்டணி மாயம் நிகழும் வாய்ப்பு உண்டு. அ.தி.மு.க., கூட்டணியின் தலைவர்கள், மாநில அளவில் முக்கியத்துவம் பெற்றவர்கள் என்பது, தி.மு.க.,வுக்கு இல்லாத ஒரு வாய்ப்பு. இதை, அ.தி.மு.க., பயன்படுத்திக் கொள்ள, கூட்டணியைப் பெற்றுக் கொள்வதில், பரப்புவதில் முனைய வேண்டும். அதுதான் வெற்றிக்கு முக்கியம். முதல் ஒன்றிரண்டு கூட்டங்களில், இந்த மாயம் நிகழத் துவங்கி விடும். பழைய சாடல்கள் மறக்கப்பட்டுவிடும். தொடர்ந்து ஒரே மேடையில், கூட்டணி தலைவர்கள் பேசும்போது, அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும். இல்லையென்றால், பெரிய அபாயத்தையே சந்திக்கும்.

-ஹரன் பிரசன்னா, எழுத்தாளர்

மூலக்கதை