கேரளாவில் பா.ஜனதா தொகுதிப்பங்கீடு முடிந்தது: 14 இடங்களில் பாஜ போட்டி

தினகரன்  தினகரன்
கேரளாவில் பா.ஜனதா தொகுதிப்பங்கீடு முடிந்தது: 14 இடங்களில் பாஜ போட்டி

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாரத தர்ம ஜனசேனா மற்றும் கேரள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜ தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. பாஜ 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  கேரளாவில் அடுத்த மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு பாரத தர்ம ஜனசேனா மற்றும் கேரள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பாஜ போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் பாஜ தேசிய செயலாளர் முரளிதரராவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கேரளாவில் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜ 14 தொகுதிகளில் நிற்கிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரத தர்ம ஜனசேனா 5 தொகுதிகளிலும் பி.சி.தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. கேரளாவில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் உள்ளது’’ என்றார். மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரை எதிர்த்து போட்டியிடுவார் என பாஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை