மக்களை முட்டாளாக நினைப்பதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும்: பிரியங்கா காந்தி ஆவேசம்

தினகரன்  தினகரன்
மக்களை முட்டாளாக நினைப்பதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும்: பிரியங்கா காந்தி ஆவேசம்

மிர்சாபூர்: “நாட்டு மக்கள் முட்டாள்கள் என நினைப்பதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும்” என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் மக்களவை தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 3 நாட்களாக மேற்கொண்டுள்ளார். கங்கை நதியோரத்தில் உள்ள பொதுமக்களை படகு மூலம் சென்று சந்தித்து அவர் ஆதரவு திரட்டி வருகின்றார். மிர்சாபூரில் நேற்று பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் செய்தார்.  அப்போது செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, “நீங்கள் பணியாற்றும் பத்திரிகை உள்பட நாட்டில் உள்ள அனைத்து  அரசு அமைப்புகள் மீதும் கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி தாக்குதல் நடத்தி வருகிறார். பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்று நினைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் உங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். நான் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட மாட்டேன். ஏதாவது நடந்தால் கூட நாங்கள் துன்புறுத்தப்படுவோம். ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம். அவருக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். நாங்கள் அதிகமாக துன்பப்படுத்தப்பட்டால் நாங்கள் மேலும் வலிமையோடு எதிர்ப்போம்” என்றார். முன்னதாக நேற்று முன்தினம் பிரசாரம் செய்த பிரியங்கா காந்தி, மோடி அரசு நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை. இந்த அரசு மக்களுக்கு குச்சிமிட்டாய்தான் கொடுத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மோடி அரசில் ஊழியர்களுக்கு பதிலாக இயந்திரங்கள் இடம்பிடித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்தால் அது விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்காக பணியாற்றும்” என்றார்.

மூலக்கதை