அபாயம்!மதுரை மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு...மழையின்றி வறண்டு வரும் வைகை

தினமலர்  தினமலர்
அபாயம்!மதுரை மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு...மழையின்றி வறண்டு வரும் வைகை

மதுரை:மழையின்றி வறண்டு வரும் வைகை அணையால் மதுரை மாநகராட்சியில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மாநகராட்சியில் 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் வைகை அணை முக்கிய பங்கு வகிக்கிறது. அணையிலிருந்து தினமும் 115 எம்.எல்.டி., (ஒரு எம்.எல்.டி., என்பது நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் லிட்டர்) குடிநீர் எடுக்கப்படுகிறது. இது தவிர வைகையாற்று படுகையில் 25, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 11, போர்வெல்கள் மூலம் 10 எம்.எல்.டி., தண்ணீர் தினமும் பெறப்படுகிறது. இவற்றின் மூலம் தினமும் 161 எம்.எல்.டி., குடிநீர் கிடைத்தது.இந்நிலையில் கோடை துவங்கியுள்ளதால் நீர்நிலைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையுள்ளது.
வைகை அணை, காவிரி திட்ட தண்ணீர் மட்டுமே தற்போது முழுமையாக கிடைக்கிறது. வறட்சியால் வைகையாற்றுப்படுகை வறண்டுள்ளது. அங்கு கிடைத்த 25 எம்.எல்.டி., குடிநீர் தற்போது 15 ஆக குறைந்துள்ளது. போர்வெல்கள் மூலம் கிடைத்த 10 எம்.எல்.டி., தற்போது 7 எம்.எல்.டி.,யாக குறைந்துள்ளது. கோடை துவக்கத்திலே இந்த நிலை எனில் வரும் நாட்களில் நீர் ஆதாரங்கள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது.இதற்கிடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிகட்ட நகரில் பல்வேறு பகுதிகளில் போர்வெல்கள் அமைக்கப்பட்டன. துார்ந்து போயுள்ள அவற்றை மீண்டும் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: முல்லை பெரியாறு அணையில் 113.6 அடி, வைகை அணையில் 44.53 அடி தண்ணீர் இருப்பதால் கோடையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது. இதை கொண்டு ஜூன் வரை சமாளிக்கலாம். அதன் பிறகு தென்மேற்கு பருவமழை துவங்கி, பெரியாறு அணைக்கு தண்ணீர் வரும். அதுவரை நிலைமையை சமாளிக்க நகரில் உள்ள 400 போர்வெல்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை 300 போர்வெல்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. தட்டுப்பாடு இன்றி கோடையிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என்றனர்.

மூலக்கதை