மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐரோப்பிய யூனியனில் அறிவிக்க ஜெர்மனி அரசு முயற்சி

தினகரன்  தினகரன்
மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐரோப்பிய யூனியனில் அறிவிக்க ஜெர்மனி அரசு முயற்சி

புதுடெல்லி: ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா தடுத்து நிறுத்திய நிலையில், ஐரோப்பிய யூனியனில் அவரை தீவிரவாதியாக அறிவிக்கும் முயற்சியில் ஜெர்மனி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வந்தது. இதன் மூலம் அவரது சொத்துகள் முடக்கப்படும், வெளிநாடுகளுக்கு செல்வதும் தடுத்து நிறுத்தப்படும். இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 4வது முறையாக இதனை தடுத்து நிறுத்தியது. இதனிடையே புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை சர்வதேச நாடுகளிடம் இந்தியா சமர்ப்பித்தது. இந்நிலையில், 28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய யூனியனில் பல நாடுகளுடன் நல்ல நட்புறவு வைத்துள்ள ஜெர்மனி, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 15ம் தேதி, மசூத் அசார் மீது பிரான்ஸ் நிதித்தடை விதித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் இதற்கு முழு ஆதரவு அளிக்கும் என்று ஜெர்மன் தூதரக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் நிதித்தடை விதித்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 15 நிரந்தர உறுப்பினர் நாடுகளில் 14 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை