இந்தியாவில் 90 லட்சம் பெண்கள் வேலை இழப்பு: பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் 90 லட்சம் பெண்கள் வேலை இழப்பு: பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல்

சின்சொலி: இந்தியாவில் ஒருகோடி பேர் வேலையிழந்துள்ள நிலையில் இதில் 90 லட்சம் பேர் ெபண்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பான மத்திய அரசின் அறிக்கை ஒன்று சமீபத்தில் கசிந்தது. இதில் கடந்த 2017-18 ம் ஆண்டில் மட்டும் 23.3 சதவீதம் பெண்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடந்த 2011-12 ம் ஆண்டில் இருந்த வேலைவாய்ப்பை விட 8 சதவீதம் குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்த 8 ஆண்டுகளில் 8சதவீதம் அளவுக்கு வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட காலத்தில் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில் மட்டும் 1 கோடி பேர் வேலைகளை இழந்துள்ளனர். இதில் 90 லட்சம் பேர் பெண்கள். குறிப்பாக விவசாய கூலித்தொழில், கட்டுமானப்பணி போன்ற அமைப்பு சாரா துறைகளில் பணியாற்றி வரும் பெண்கள் தான் அதிகளவு வேலைகளை இழந்துள்ளனர். இதற்கு இயந்திரங்கள் வருகையும் முக்கிய காரணம். சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல் மற்றும் கோதுமைகளை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்கிறார்கள். இதனால் அவர்களது நேரம், பணமும் மிச்சமாவதுடன் விரைவாகவும் விற்பனை செய்யமுடிகிறது.   இதுவரை நெல், கோதுமைக்கு மட்டுமே அறுவடை இயந்திரங்கள் இருந்தன. தற்போது கரும்பு வெட்ட வெங்காயத்தை அறுவடை செய்யவும் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோதுமை அறுவடைக்கு விவசாய கூலி பெண்களுக்கு கடும் கிராக்கி இருக்கும். தற்போது இந்த நிலை மாறிவிட்டது. வேலை கிடைக்காதா என ஏங்குகின்றனர் கிராமப்புற பெண்கள். இந்தியாவில் ஆண்களுக்கு கிடைப்பதுபோல் வேலைவாய்ப்புகள் பெண்களுக்கு கிடைப்பதில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை