ரயில் பயணியரை மூளைச்சலவை செய்து... உண்டியல் வசூல்! ரயில்வே பாதுகாப்பு படையினர், 'கப்சிப்

தினமலர்  தினமலர்
ரயில் பயணியரை மூளைச்சலவை செய்து... உண்டியல் வசூல்! ரயில்வே பாதுகாப்பு படையினர், கப்சிப்

லோக்சபா தேர்தலில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக கூறி, சில இளைஞர்கள், சென்னை புறநகர் ரயில் பயணியரிடம், நன்கொடை வசூல் செய்து வருகின்றனர். இவர்கள், தேர்தலில் போட்டிடுவதில்லை; வசூலிக்கும் பணத்தை, 'அபேஸ்' செய்து விடுவர் என, விபரம் அறிந்தோர் தெரிவித்தனர்.

சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து, அரக்கோணம் இடையில், புறநகர் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இவற்றில், தினமும், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர்.அவர்களுடன், சுண்டல், வேர்க்கடலை, பழங்கள், காய்கறி, பேனா போன்றவற்றை விற்போரும் பயணிக்கின்றனர். மேலும், 'பிட் நோட்டீஸ்' கொடுத்து பிச்சையெடுப்பதும் உண்டு.இ தனால், ரயில்களில் எப்போதும் திருவிழா போல், கூட்டம் நிறைந்து காணப்படும்.

நன்கொடை:
தொடர்ந்து, ரயிலில் பயணம் செய்வோர், நெருங்கிய நண்பர்களாக மாறி, அன்றாட நிகழ்வு முதல் அரசியல் வரை விவாதிப்பர். லோக்சபா தேர்தலுடன், தமிழகத்தில், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்., 18ல், இடைத்தேர்தல் நடக்கிறது.அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., இடம்பெற்றுள்ளன. அதை, தி.மு.க., தலைமையில், காங்கிரஸ் - இரு கம்யூனிஸ்ட்கள் - ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தை ஆகிய கட்சிகள் எதிர்க்கின்றன. இதனால், ரயில் பயணியர் பலரும், லோக்சபா தேர்தல் விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

மின்சார ரயிலில், ஐந்து முதல் ஏழு பேர் கொண்ட இளைஞர் குழு ஏறும். அதில், இரண்டு பெண்களாவது இருப்பர். பெட்டியின் மையப்பகுதியில் இருந்து, காதை கிழிக்கும் சப்தத்தில், மத்திய, மாநில அரசுகளை திட்டித்தீர்ப்பர். ஸ்டெர்லைட், பசுமைவழிச்சாலை, நீட், நியூட்ரினோ என, அனைத்து சம்பந்தமாகவும், அரசுக்கு எதிராக, உணர்ச்சி பொங்க, அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசுவதை போல பேசுவர். பின்னர், இந்த விஷயங்களை எல்லாம் எதிர்த்து போராட, தென்மாவட்டத்தில், ஏதாவது ஒரு ஊர் பெயரை சொல்லி, அங்கு மாநாடு நடத்துகிறோம் என்றும், அதற்கான செலவு நீங்கள் தரும் நன்கொடை தான் என்றும் கூறி, உண்டியல் குலுக்குவர்.

அவர்களது மூளைச்சலவை பேச்சில், மெய் மறக்கும் பல பயணியர், 10 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை, நன்கொடை வழங்குவர். இந்த காட்சியை, தினமும் மின்சார ரயில்களில் பார்க்கலாம்.நிலையங்களில், ரயில் நிற்கும் போது, பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரை பார்த்ததும், அவர்கள், தங்களின் உண்டியல், துண்டறிக்கைகளை, பைகளில் மறைத்து கொள்கின்றனர்.

நடவடிக்கை:
இது குறித்து, விபரம் அறிந்த ரயில் பயணியர் கூறியதாவது: தேர்தல் நடக்கும் நேரங்களில், ரயில் மற்றும் பேருந்துகள், இது போன்று, 'பிட் நோட்டீஸ்' கொடுத்து, பணம் வசூலிக்கும் வேட்டையில், பலர் ஈடுபடுகின்றனர். இவர்கள், சரளமாகவும், தெளிவாகவும், உரத்த சத்தமிட்டு பேசவும் கற்றுள்ளனர். எங்கும், ஒரே டயலாக் தான் பேசுவர்.வசூலாகும் பணத்தை, அவர்கள் பங்கு பிரித்துக் கொள்வர். அவர்கள், தேர்தலில் போட்டியிடுவதே கிடையாது. ஏமாறும் பயணியரிடம், பணம் வசூலிப்பதே, அவர்களின் நோக்கம்.ரயில்வே போலீசார், இது போன்ற மோசடி ஆசாமிகளை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

மூலக்கதை