டோனி 4வது வீரராக களமிறங்குவார்..... பயிற்சியாளர் பிளெமிங் சொல்கிறார்

தினகரன்  தினகரன்
டோனி 4வது வீரராக களமிறங்குவார்..... பயிற்சியாளர் பிளெமிங் சொல்கிறார்

சென்னை: ஐபிஎல் தொடரில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பெரும்பாலும் 4வது வீரராகள் களமிறங்குவார் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார். சிஎஸ்கே ரசிகர்களை ஈர்ப்பதற்காக அணியின் பெயர், சின்னம் பொறித்த கடிகாரம், சீருடை, பாட்டில், வாசனை திரவியம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கிறது. அதற்காக  சிஎஸ்கே இணையதளத்தில் நடைபெறும் ஆன்லைன் விற்பனைக்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது: சிஎஸ்கே அணி அனைத்து வகையிலும் சம பலத்துடன் விளங்குகிறது. எங்களை எந்த அணியுடனும் ஒப்பீடு செய்யத் தேவையில்லை. அப்படி ஒப்பீடு செய்தால் நம்மிடம் உள்ள நல்லது கெட்டது தெரியாமல் போய்விடும். எல்லா அணியிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர். எந்த சூழலிலும் விளையாடும் வகையில் அணியை வைத்திருப்பதுதான் முக்கியம்.அணியில் உள்ள வீரர்களின் வயது குறித்து கவலையில்லை. மனநிலைதான் முக்கியம். அதுதான் அணிக்கு கோப்பையை கடந்தமுறை பெற்று தந்தது. நீங்கள் குறிப்பிடும் கேதர் ஜாதவ், பிராவோ, டு பிளெஸ்ஸி, டோனி, ரெய்னா ஆகியோர் பலமுறை வெற்றிக்கு காரணமானவர்களாக இருந்திருக்கிறார்கள். டோனி  வசதியான வரிசையில் இறங்கி விளையாடுவார். பெரும்பாலும் 4வது வீரராகக் களமிறங்குவார். கடந்த 10 மாதங்களாக அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் கேதார் ஜாதவும் இந்தமுறை சேர உள்ளார். அதற்கு ஏற்ப பேட்டிங் வரிசை இருக்கும். மிட்செல் சான்டனர் போன முறை காயம் காரணமாக விளையாடவில்லை. இம்முறை அவர் முழுவீச்சில் தயாராகி உள்ளார். ஆசிய மைதானங்களில் விளையாடிய அனுபவம் உள்ளவர் என்பது கூடுதல் சாதகம். எங்களிடம் போதுமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். உலககோப்பைக்கு முந்தைய பயிற்சி ஆட்டங்களாக ஐபிஎல் இருக்கும். ஐபிஎல் முடிவதற்கு முன்பே சில வீரர்கள் உலக கோப்பைக்கு தயாராவதற்காக செல்வார்கள் என்பது தெரியவில்லை. அதனை  கருத்தில் கொண்டுதான் வியூகங்களை அமைத்து வருகிறோம். நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. அந்த நேரத்தில் நான் குடும்பத்துடன் சிங்கப்பூரில் இருந்தேன். இவ்வாறு பிளெமிங் கூறினார். இந்நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அலுவலர்  கே.எஸ்.விஸ்வநாதன்,  சந்தைப் பிரிவு அலுவலர் சங்கரன் உண்ணி ஆகியோர் உடன் இருந்தனர்.உலக கோப்பையில் விளையாடுவேன்...கடந்த முறை சென்னை  அணியில் இடம் பெற்றும் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. சிஎஸ்கே தூள் கிளப்பிக் கொண்டிருந்தபோது நான் மெல்போர்னில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தேன். கோப்பையை வென்ற அணியில் இடம் பெறும் வாய்ப்பை நழுவ விட்டு விட்டேன். இங்கு இருக்கும் சூழல்,  பயிற்சி, பண்பாடு எனக்கு பிடித்திருக்கிறது. என்னுடைய பந்து வீச்சைதான் மேம்படுத்த வேண்டி உள்ளது. சிஎஸ்கே அணியில் நான் பந்து வீசும் சூழல் இருக்கும் என நினைக்கவில்லை.  இந்த முறை உலக கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகிறேன். உலக கோப்பைக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. இப்போது உடல்தகுதியுடன் இருக்கிறேன். அணியின் வெற்றிக்காக பாடுபடுவேன். கிரிக்கெட் வீரர் ஒவ்வொருவருக்கும் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பது கனவு. எனக்கும் இந்திய அணிக்காக உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. - சிஎஸ்கே வீரர் கேதார் ஜாதவ்.

மூலக்கதை