கேப் டவுனில் முதல் டி20 சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா

தினகரன்  தினகரன்
கேப் டவுனில் முதல் டி20 சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா

கேப் டவுன்: இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டியில், தென் ஆப்ரிக்க அணி பரபரப்பான சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்தது. குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 41 ரன் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். திசாரா பெரேரா 19, அவிஷ்கா பெர்னாண்டோ, ஏஞ்சலோ பெரேரா தலா 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் பெலுக்வாயோ 3, ஸ்டெயின், ரபாடா, லுதோ சிபம்லா, இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியும் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்ததால் இரு அணிகளும் சமநிலை வகித்தன. டேவிட் மில்லர் 41 ரன் (23 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), வான் டெர் டுசன் 34, கேப்டன் டு பிளெஸ்ஸி 21, டி காக் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.16.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்திருந்த தென் ஆப்ரிக்கா, மேற்கொண்டு 16 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க சுப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் மில்லர் விளாசிய 1 சிக்சர், 1 பவுண்டரி உட்பட தென் ஆப்ரிக்கா 14 ரன் எடுத்தது. அடுத்து 6 பந்தில் 15 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இம்ரான் தாஹிர் வீசிய அந்த ஓவரில் பெர்னாண்டோ - பெரேரா ஜோடி 4 ரன் மட்டுமே சேர்க்க, தென் ஆப்ரிக்கா வெற்றியை தட்டிப் பறித்தது. டேவிட் மில்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நாளை நடக்கிறது.

மூலக்கதை