கனடா எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளி எம்பி நியமனம்

தினகரன்  தினகரன்
கனடா எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளி எம்பி நியமனம்

ஒட்டாவா: கனடா நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங், முதல் வெள்ளையர் அல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பர்னபி தெற்கு நகர தொகுதியில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் புதிய ஜனநாயக  கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங் 38.5 சதவீத  வாக்குகள் பெற்று வெற்றி  பெற்றார். வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. தலையில் டர்பன் அணிந்து நெஞ்சில் கைவைத்து நாடாளுமன்றத்திற்குள் அவர் நுழைந்தபோது பலத்த கைத்தட்டல்களுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவையில் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றிய அவர், நியூசிலாந்து மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தனது வருத்தத்தை பதிவு செய்தார். அப்போது பேசிய அவர், ``பர்னபியில் வீடு ஒன்று வாங்கியும் அதில் வாழ முடியாத தாய் ஒருவரை சந்தித்தேன். அவரது மகனும், மற்ற கனடா மக்களை போன்று நம்பிக்கை இழந்துள்ளார். அரசு மலிவு விலை வீடுகளை கட்டி கொடுக்க முன்வர வேண்டும்’’ என்று கூறினார். முதலில் ஜக்மீத் சிங்கை  `ஹவுஸ் ஆப் காமனு’க்கு (மக்களவை) வரவேற்ற பிரதமர் ட்ரூடோ, பின்னர் வறுமைக்கு எதிராக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கமளித்தார். பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு, மார்ச் மாத பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினரை கவரும் பல கவர்ச்சி திட்டங்களை ட்ரூடோ அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ஜக்மீத் சிங் இந்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் பிரதமர் ட்ரூடோவை எதிர்த்து போட்டியிடுவார் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

மூலக்கதை