ஐ.டி.பி.ஐ., பேங்க் பெயர் மாற்ற ரிசர்வ் வங்கி மறுப்பு

தினமலர்  தினமலர்
ஐ.டி.பி.ஐ., பேங்க் பெயர் மாற்ற ரிசர்வ் வங்கி மறுப்பு

புதுடில்லி: ஐ.டி.பி.ஐ., பேங்க் பெயரை மாற்றுவதற்கு, ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளது.

ஆயுள் காப்பீட்டு துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., நிறுவனம், இந்தாண்டு ஜனவரியில், ஐ.டி.பி.ஐ., வங்கியில், அதன் பங்கு மூலதனத்தை, 51 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலம், இவ்வங்கியின் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் நிறுவனம் என்ற சிறப்பு, எல்.ஐ.சி.,க்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, ஐ.டி.பி.ஐ., வங்கி இயக்குனர் குழு, வங்கியின் பெயரை, ‘எல்.ஐ.சி., பேங்க்’ அல்லது ‘எல்.ஐ.சி., – ஐ.டி.பி.ஐ., பேங்க்’ ஆக மாற்ற அனுமதி கோரி, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்தது.

ஆனால், பெயர் மாற்றத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்து விட்டது. அதனால், ஐ.டி.பி.ஐ., பேங்க் என்ற பெயரிலேயே வங்கி தொடர்ந்து செயல்படும் என, இயக்குனர் குழு தெரிவித்துள்ளது.

தனியார் துறை:
இதனிடையே, ரிசர்வ் வங்கி, ஐ.டி.பி.ஐ., வங்கியை, பொதுத் துறையில் இருந்து, தனியார் துறை வங்கிகள் பிரிவிற்கு மாற்றியுள்ளது.கடந்தாண்டு, செப்டம்பரில், ஐ.டி.பி.ஐ., வங்கியில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 86 சதவீதமாக இருந்தது. எல்.ஐ.சி.,யின் பங்கு மூலதனம், 8லிருந்து, 51 சதவீதமாக உயர்ந்ததை அடுத்து, மத்திய அரசின் பங்கு மூலதனம், 46.46 சதவீதமாக குறைந்தது.இதனால், ஐ.டி.பி.ஐ., வங்கி, தனியார் துறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இழப்பு தொடர்கிறது:
நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், அக்டோபர் – டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், ஐ.டி.பி.ஐ., வங்கி, 4,185 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.இந்த இழப்பு, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 1,524 கோடி ரூபாயாக இருந்தது. வாராக் கடன் அதிகரிப்பால், இவ்வங்கி தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக இழப்பை சந்தித்துள்ளது.

மூலக்கதை