ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வு; மீண்டும் மோடி ஆட்சி எதிர்பார்ப்பில் குவியும் முதலீடு

தினமலர்  தினமலர்
ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வு; மீண்டும் மோடி ஆட்சி எதிர்பார்ப்பில் குவியும் முதலீடு

புதுடில்லி: கடந்த ஒரு மாதத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, ஆசியாவின் இதர கரன்சிகளை விட அதிகமாக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என, கருத்துக் கணிப்புகள் வெளியானதால், அன்னியச் செலாவணி, பங்குச் சந்தை ஆகியவை ஏற்றம் கண்டு வருகின்றன.

இது குறித்து, ‘புளும்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 2018 ஆகஸ்ட் முதல் சரிவடைந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில், ரூபாய் மதிப்பு, ஆசியாவின் இதர கரன்சிகளை விட அதிகரித்துள்ளது.இதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, 273 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்பார் என, வெளியான இரு நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் தான் காரணம்.

பங்குகள்:
இதன் விளைவாக, பங்குகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் அன்னிய முதலீடுகள் குவிந்து வருகின்றன.ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சில நாடுகளின் மத்திய வங்கிகள், பணவாட்டத்தை கட்டுப்படுத்த, வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாகவும், இந்தியாவில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் டாலரில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால், ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.கடந்த, 18ம் தேதி நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள், பங்குகளில், 330 கோடி டாலர் முதலீடு செய்துள்ளனர். கடன் பத்திர முதலீடுகளில், 140 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.அதிக அளவில் டாலர் குவிந்ததால், கடந்த ஆண்டு ஆகஸ்டுக்கு பின், ரூபாய் மதிப்பு, புதியஉச்சத்தை எட்டியுள்ளது.தொடர்ந்து, ஏழு வர்த்தக தினங்களாக உயர்ந்து வந்த ரூபாய் மதிப்பு, லாப நோக்கில் பங்குகள் விற்கப்பட்டதால், இரு தினங்களாக சற்று சரிவை சந்தித்தன.

முன்பேர வர்த்தகம்:
அன்னியச் செலாவணி முன்பேர வர்த்தகத்தில், 2018, செப்டம்பருக்கு பின், சரிந்து வந்த ரூபாய் மதிப்பு, ஏப்ரல் மாதத்திற்கான வாங்கும் விலையை விட, 0.19 சதவீதம் உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கத்தின் அடிப்படையில் கணிக்கும் விலை, கடந்த வாரம் வர்த்தக இறுதி நாளன்று, 5.87 சதவீதம் குறைந்தது. அதனால், குறுகிய காலத்திற்கு, ரூபாய் மதிப்பு மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 0.15 காசுகள் குறைந்து, 68.81ல் நிலை கொண்டது. இந்தாண்டு பிப்., 13ல், ரூபாய் மதிப்பு, அதிகபட்சமாக, 70.86ஐ எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உயரும்:
அதிக வருவாய் ஈட்டும் நோக்கில், அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.இரண்டாவது முறையாக, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு, சர்வதேச நிதி நிலவரம் போன்றவற்றால், இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம், ரூபாய் மதிப்பு, 67 ஆக உயரக் கூடும்.– ஸ்காடியா வங்கி, சிங்கப்பூர்

மூலக்கதை