நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு: மார்ச் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

தினகரன்  தினகரன்
நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு: மார்ச் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

லண்டன்: வங்கிக் கடன் மோசடியில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதையடுத்து நீரவ் மோடி மீது சிபிஐ, அமலாக்கத்துறையினர் நிதி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளன. மேலும் நீரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அவரை கைது செய்ய இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் நீரவ் மோடி எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது. இதனிடையே நீரவ் மோடியின் மனைவிக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவை பிறப்பித்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மாறு வேடத்தில் நீரவ் மோடி சுதந்திரமாக சுற்றித்திரியும் வீடியோ ஆதாரங்கள் வெளியானது. எனவே நீரவ் மோடியை நாடு கடத்தக்கோரி லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் நீரவ் மோடியை ஆஜர்படுத்த லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று லண்டனில் நீரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், ஜாமீன் வழங்கக்கோரி நீரவ் மோடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது, மனு தள்ளுபடி செய்த லண்டன் நீதிமன்றம், மார்ச் 29-ம் தேதி வரை நீரவ் மோடியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை