அக்னிதேவியில் நடிக்கவில்லை: பாபி சிம்ஹா பரபரப்பு புகார்

தினமலர்  தினமலர்
அக்னிதேவியில் நடிக்கவில்லை: பாபி சிம்ஹா பரபரப்பு புகார்

ஜான் பால்ராஜ் என்ற புதுமுக இயக்குனர் தனது நண்பர் ஸ்டாலினுடன் இணைந்து தயாரித்து, இயக்கி இருக்கும் படம் அக்னி வெசஸ் தேவி. இதில் பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜாக்கீஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார், ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் நாளை மறுநாள் (22ந் தேதி) வெளிவருகிறது.

இந்த நிலையில் அக்னி வெசஸ் தேவி படத்தில் நான் நடிக்கவில்லை என்று பாபிசிம்ஹா, படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜான் பால்ராஜ் மீது பரங்கிமலை காவல் துணை ஆணையரிடம் நேற்று பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் இயக்கும், அக்னிதேவி (முன்பு அக்னிதேவ்) படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். 5 நாட்கள் தான் நடித்தேன். என்னிடம் சொல்லப்பட்ட கதையை மாற்றி எடுத்தார்கள், நான் நடித்த காட்சிகளை போட்டு காட்டும்படி கூறினேன். அதற்கும் மறுத்து விட்டார்கள். இதனால் படத்தலிருந்து விலகி விட்டேன். இது தொடர்பாக கோவை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் படத்தின் பெயரை அக்னி தேவி என்ற பெயரில் வருகிற 22ந் தேதி வெளியிட இருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். விளம்பரங்களில் என்னுடைய படத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தில் எனக்கு பதிலாக டூப் போட்டு எடுத்தும், கிராபிக்ஸ் செய்தும் படத்தை முடித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து பரங்கிமலை காவல் ஆணையரின் உத்தரவுப்படி, நந்தம்பாக்கம் போலீசார், ஜான்பால்ராஜ் மீது ஆள்மாறாட்டம், மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் வருகிற 22ந் தேதி படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை