சினிமாவை கண்காணிக்கும் தேர்தல் கமிஷன் : 2 தெலுங்கு படங்களுக்கு தடை

தினமலர்  தினமலர்
சினிமாவை கண்காணிக்கும் தேர்தல் கமிஷன் : 2 தெலுங்கு படங்களுக்கு தடை

நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் நேரத்தில் வெளிவரும் திரைப்படங்களையும் கண்காணிக்கத் தொடங்கி இருக்கிறது தேர்தல் கமிஷன். திரைப்படங்கள் என்ற போர்வையில் பிரச்சாரத்தை தடுக்கவே இந்த நடவடிக்கை. இதனால் ஹிந்தியில் தேர்தல் நேரத்தில் அதாவது வருகிற 12ந் தேதி வெளிவருவதாக இருந்த பிஎம் நரேந்திரமோடி என்ற திரைப்படம் தேர்தலுக்கு முன்னதாகவே அதாவது ஏப்பரல் 5ந் தேதி வெளிவருவதாக அறிவித்திருக்கிறது.

தேர்தல் நேரத்தில் தெலுங்கில் லட்சுமி என்.டி.ஆர், மற்றும் முதல்வர் அவர்களே நீங்கள் வாக்கு கொடுத்தீர்கள் (முக்கியமந்திரிகாரு மாட்ல தப்பாடு) என்ற இரு படங்களையும் தேர்தல் நேரத்தில் வெளியிடக்கூடாது என்று தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

பிஎம் நரேந்திரமோடி படம் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ்பாடும் படம், லட்சுமி என்.டி.ஆர் படம் என்.டி.ராமராவை கிண்டல் செய்யும் படம், முதல்வர் அவர்களே நீங்கள் வாக்கு கொடுத்தீர்கள் படம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விமர்சிக்கும் படம்.

தேர்தல் கமிஷனின் இந்த முடிவை எதிர்த்து முதல்வர் அவர்களே நீங்கள் வாக்கு கொடுத்தீர்கள் என்ற படத்தின் இயக்குனர் போஸானி கிருஷ்ணன் நீதிமன்றம் செல்ல உள்ளார். திரைப்படம் வெளியிடுவது குறித்து தணிக்கை குழுதான் முடிவு செய்ய முடியும், தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை. என்கிறார் அவர்.

இந்த நிலையில் தேர்தல் காலத்தில் அரசியல் தொடர்பான தமிழ் படங்கள் எதுவும் வெளிவருகிறதா என்பதையும் தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

மூலக்கதை