போனி கபூரின் புதிய கூட்டணி

தினமலர்  தினமலர்
போனி கபூரின் புதிய கூட்டணி

மறைந்த பாலிவுட் நடிகையான ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூர், தமிழ்ப்படங்களை தொடர்ந்து தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார். அஜித் நடிக்கும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார் போனிகபூர்.

முதல் படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதற்காக, அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற 'பிங்க்' என்ற பாலிவுட் படத்தை ரீமேக் செய்து வருகிறார். 'நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது 'பதாய் ஹோ' என்ற மற்றொரு பாலிவுட் படத்தின் ரீமேக் உரிமையையும் போனி கபூர் வாங்கியுள்ளார்.

நகைச்சுவை காட்சிகளைக் கொண்ட இப்படம் பாலிவுட்டில் வெளியானபோது 100 நாட்களுக்கும் மேல் ஓடியது. அதுமட்டுமல்ல, உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை படைத்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக் ரைட்ஸை வாங்கியுள்ள போனி கபூர், அந்தந்த மொழிகளில் பதாய் ஹோ படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார். தமிழில் இளம் நாயகன் ஒருவர் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. அவர் யார் என்பது விரைவில் தெரியவரும்.

மூலக்கதை