டிஜிட்டல் உரிமை, தெலுங்கில் புதிய கட்டுப்பாடு

தினமலர்  தினமலர்
டிஜிட்டல் உரிமை, தெலுங்கில் புதிய கட்டுப்பாடு

ஒரு காலத்தில் திரைப்படங்களை தியேட்டர்களில் மட்டுமே திரையிட முடியும். 70களின் மத்தியில் டிவிக்கள் அறிமுகமான போது அரசு தொலைக்காட்சிகளில் வாரம் ஒரு படம் திரையிடப்பட்டது. அப்போது அதற்கு சில ஆயிரங்கள் மட்டுமே தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கும். 80களில் 'விஎச்எஸ்' எனப்படும் முறையில் வீடியோ பிளேயரில் படங்களை வீட்டில் பார்க்கும் முறை வந்தது. அதனால் வீடியோ உரிமை மூலம் தயாரிப்பாளர்களுக்கு சில ஆயிரங்கள் கிடைத்தது.

90களில் தனியார் தொலைக்காட்சிகள் வந்த பிறகு தினமும் திரைப்படங்களை ஒளிபரப்பும் முறை வந்தது. அதனால், தயாரிப்பாளர்கள் சில லட்சங்களைப் பெற்றார்கள். போட்டிக்கு பல சேனல்கள் வந்த பிறகு சில லட்சங்கள் பல லட்சங்களாகின. அந்த டிவிக்கள் பிரபலம் அடைந்த பின் லட்சங்கள் கோடிகளாக மாறின.

சில வருடங்களாக பெரிய நடிகர்களின் படங்களின் சாட்டிலைட் உரிமை 15 கோடி முதல் 20 கோடியைக் கடந்தும் விற்கப்படுகின்றன. இப்போது புதிதாக டிஜிட்டல் உரிமை மூலம் மேலும் சில கோடிகள் தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் படம் வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களுடைய தளங்களில் படங்களை ஒளிபரப்பி வந்தன.

இதற்கு தெலுங்குத் திரையுலகத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். அதன்படி இனி, படம் வெளியான நாளிலிருந்து 8 வாரங்களுக்குப் பிறகுதான் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையைக் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். ஏப்ரல் 1 முதல் இது அமல்படுத்தப்பட உள்ளதாம்.

புதிய படங்களை டிவிக்களில் சீக்கிரம் போடுவார்கள் என பலர் தியேட்டர்களுக்கு வராமல் இருந்தார்கள். சமீப காலங்களில் நெட்டில் அதிகாரப்பூர்வமாக வந்துவிடும் என தியேட்டர்களுக்கு வருவதைத் தவிர்த்தார்கள். இந்த புதிய கட்டுப்பாடால், 8 வாரங்களுக்காவது வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் ஒரு நிம்மதி இருக்கும் என டோலிவுட்டினர் தெரிவிக்கிறார்கள்.

இது போன்ற கட்டுப்பாடு, தமிழிலும் அறிமுகமாகுமா என்பது இங்குள்ள வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது.

மூலக்கதை