ஐபிஎல் டி20 தொடர் லீக் போட்டி அட்டவணை வெளியீடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் டி20 தொடர் லீக் போட்டி அட்டவணை வெளியீடு

புதுடெல்லி: ஐபிஎல் டி20 லீக் போட்டி அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன், மார்ச் 23ம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்குகிறது. சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் முதல்  போட்டியில் டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன், விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  மோதுகிறது. ஏப்ரல் - மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் அதற்கேற்ப போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் முதல் கட்டமாக 17 லீக்  ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியானது. தற்போது அனைத்து லீக் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் களமிறங்கும் 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதுகின்றன.

இந்த சுற்று மே 5ம் தேதி வரை நடைபெறுகிறது.   இதில் மொத்தம் 56 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் மோத உள்ளன.

பிளே  ஆப் சுற்று மற்றும் பைனலுக்கான விவரம் பின்னர் வெளியிடப்பட உள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘ஐபிஎல் தொடரின் 12வது சீசன் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.   ஒவ்வொரு அணியும் தங்களின் உள்ளூர் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்களை விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தேர்தல்  ஆணையம் மற்றும் காவல் துறைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

பிளே ஆப், பைனலுக்கான விவரம் விரைவில் வெளியாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை